கிளம்புகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம்.. பிப்ரவரி 9 முதல்!

Manjula Devi
Jan 23, 2025,05:01 PM IST

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், வரும் பிப்ரவரி 9ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியுள்ளார்.


2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சியினரும் மும்மரமாக செயல்பட துவங்கிவிட்டனர். ஏனெனில் 2026 ஆம் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டில் உள்ள கள விவரங்களை ஆய்வு செய்ய போட்டோ போட்டி கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.+


தமிழ்நாடு  முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று  திமுக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்று சேர்கிறதா என களப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அதே சமயத்தில் பல்வேறு திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும்  தொடங்கி வைத்தும் வழங்கி வருகிறார். சென்டிமென்டலாகவும், எமோஷனலாகவும் மாணவர் சமுதாயத்தினரையும் டச் செய்து வருகிறார். போகும் இடமெல்லாம் மாணவ மாணவியர் அவரை அப்பா என்று அழைப்பது வழக்கமாகி விட்டது.




மறுபக்கம்  புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என தேர்தலை நோக்கி தனது பயணத்தை தொடங்கி வருகிறார். விக்ரவாண்டியில் தனது முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளையும் வெளியிட்டார். இந்த தவெகவின் கொள்கைகள் தமிழக அரசியலில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு பல்வேறு விவாதங்களை எழுப்பியது. அதேபோல் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்தித்து நான் கடைசி வரை உங்கள் போராட்டத்தில் துணை நிற்பேன் என பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். இதனால் விஜயின் பேச்சுக்கள் 2026 ஆம் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. 


பாஜகவும் விரைவில் தனது சுற்றுப்பயணம் உள்ளிட்ட உத்திகளை கையில் எடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் நடத்த முடிவு செய்துள்ளார். இச்செய்தி அதிமுகவினரை உற்சாகப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.  கோவையில் வரும் 9ம் தேதி இது தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.


இதற்கு இடையே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலும் வருகிறது. ஆனால் அந்தத் தேர்தலை திமுக, நாம் தமிழர் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்