பாஜக கூட்டணியை உதறிய பின்னர்.. முதல் அதிமுக பொதுக்குழு.. பரபரப்பான எதிர்பார்ப்பு!

Meenakshi
Dec 26, 2023,11:07 AM IST

சென்னை: சென்னையில் இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. பாஜகவை கூட்டணியிலிருந்து உதறிய பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இக்கூட்டம் நடைபெறும் வானகரம், ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தின் நுழைவு வாயில் நாடாளுமன்ற கட்டிட தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.


கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைவர்கள் இருந்தனர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் ஒற்றை தலைமையிலான அதிமுக தற்போது உருவாகியுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இந்த நிலையில் சமீபத்தில் பாஜக கூட்டணியை உதறுவதாக அதிமுக அறிவித்தது. அந்த அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெறுவது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் என 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என 2800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த கூட்டத்தில் என்னென்ன முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு அறுசுவை விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.