ADMK vs BJP: என்ன முடிவெடுக்கும் அதிமுக.. இன்று மா.செக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை!

Su.tha Arivalagan
Sep 24, 2023,03:48 PM IST

சென்னை: அதிமுக பாஜக இடையே ஏற்பட்டுள்ள பூசல் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத நிலையில், அதிமுக குழுவின் டெல்லி பயணம் வெற்றி பெறவில்லை என்று கூறப்படும் நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் இன்று கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.


அண்ணாமலைக்கு முன்பு வரை அதிமுக - பாஜக இடையே பெரிய அளவில் பிரச்சினை ஏதும் இருந்ததில்லை. ஆனால் அண்ணாமலை தலைவரான பிறகு, குறிப்பாக இபிஎஸ்  - ஓபிஎஸ் இடையே பிரச்சினை வெடித்த பிறகு, அதிமுக - பாஜக உறவில் விரிசல் விழத் தொடங்கியது.


அவ்வப்போது வெடித்து வெளிக்கிளம்பும் இந்தப் பிரச்சினை பின்னர் அமைதியாகி விடும். இப்படித்தான் முன்பு ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சில கருத்துக்களை வெளியிட்டார். அதற்கு அதிமுக பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை. சம்பிரதாயத்துக்கு சில எதிர்ப்புகளை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டனர்.


ஆனால் சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களுக்கு அதிமுகவினர் சற்று வேகமாகவே ரியாக்ட் செய்தனர். இதை பாஜகவே கூட எதிர்பார்க்கவில்லை. செல்லூர் ராஜு நாக்கைத் துண்டிப்போம் என்றார்.. ஜெயக்குமாரோ கூட்டணியில் பாஜக இல்லை என்று அடித்துக் கூறினார். சி.வி. சண்முகமும் ஆவேசமாக பேசினார்.




அதிமுகவினரின் இந்த கோபாவேசமா  கருத்துக்களுக்கு அண்ணாமலையும் பதிலுக்கு கோபத்தைக் கொட்டி பதிலளித்தார். இது துப்பாக்கி பிடித்த கை.. யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்.. எனக்கு தன்மானம் முக்கியம்.. அதற்கு இடையூறு செய்தால் யாராக இருந்தாலும் விட மாட்டேன் என்று ஆவேசமாக அவர் பதிலளித்தார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் மூத்த அதிமுக தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றது. அங்கு அமித்ஷாவைப் பா்க்க அவர்கள் தீவிரமாக முயன்றனர். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பதில் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை மட்டுமே பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அதிமுக குழு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது.


ஒருபக்கம் அண்ணாமலை  தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். பாஜக தலைமையோ அண்ணாமலை தொடர்பாக அதிமுகவுடன் விவாதிக்கவே தயாராக இல்லை.. மறுபக்கம்.. அதிமுக தொண்டர்களும், 2ம் கட்டத் தலைவர்களும் அவமதிக்கப்பட்ட உணர்வில் உள்ளன். ஏன் அதிமுக தலைமை இப்படி பாஜக இழுத்த இழுப்புக்கெல்லாம் போகிறது.. இவ்வளவு பணிந்து போக வேண்டிய அவசியம் என்ன.. ஜெயலலிதா இருந்தபோது கட்சி எத்தனை கம்பீரமாக இருந்தது.. யாராவது ஜெயலலிதாவுக்கு எதிராக பேசத் துணிந்தார்களோ.. அண்ணாவை விமர்சித்திருந்தால் ஜெயலலிதா சும்மா விட்டிருப்பாரா என்று அதிமுகவினர் குமுறுகின்றனர்.


ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். இந்த நிலையில்தான் இன்று கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.


இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை.. ஆனால் அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. இப்படித்தான் ஜெயலலிதாவை விமர்சித்து அண்ணாமலை பேசியபோதும் தீரமானம் போட்டு அப்படியே அந்தப் பிரச்சினையை மறந்து விட்டது அதிமுக. அதேபோல இப்போதும் நடக்கலாம்.




இதைத் தாண்டி பாஜக கூட்டணியை உதறுவது, பாஜகவுக்குக் கண்டனம் தெரிவிப்பது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் நோக்கர்கள் அடித்துக் கூறுகிறார்கள். அப்படி முடிவெடுத்தால் அது அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் அதை எடப்பாடி பழனிச்சாமியோ, அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்களோ விரும்ப மாட்டார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.