வெடிக்கும் வார்த்தைப் போர்.. உடையும் நிலையில் அதிமுக கூட்டணி!
Mar 08, 2023,10:08 AM IST
சென்னை: உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்டே என்ற பழமொழிக்கேற்ப அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் வலுக்க ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால் விரைவில் கூட்டணி உடையும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சிதற ஆரம்பித்து விட்டது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவும், சசிகலா தலைமையில் இன்னொரு பிரிவுமாக அது உடைந்தது. ஓ.பி.எஸ். வசம் இருந்த முதல்வர் பதவியை சசிகலா பறிக்க நினைத்ததால் இந்தப் பிளவு ஏற்பட்டது.
அதன் பின்னர் சசிகலா ஜெயிலுக்குப் போய் விட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அவர் முதல்வரான பின்னர் டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டார். ஓபிஎஸ், எடப்பாடியுடன் இணைந்தார். டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்த ஆரம்பித்தார்.
நாளடைவில் எடப்பாடிக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் இடையே பூசல் முற்றி இருவரும் தனியாகப் பிரிந்தனர். இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக அதிமுக தலைவர்கள் பிரிந்து போனதால் தொண்டர்கள் வெறுப்பின் உச்சத்துக்குப் போய் விட்டனர். இவர்களை ஒன்றாக சேர்க்க பாஜக முயல்வதாக கூறப்பட்டாலும் கூட அதன் நிலைப்பாடு இன்று வரை கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வசம் வந்தது. ஆனால் தற்போது எடப்பாடி தரப்புக்கும், தமிழ்நாடு பாஜகவுக்கும் குறிப்பாக அண்ணாமலைக்கும் இடையே மோதல் முட்டிக் கொண்டு இருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மாணிக்கத்தை பாஜக தரப்பு தன் பக்கம் இழுத்ததால் எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. கூட்டணிக் கட்சியே இப்படிச் செய்தால் எப்படி என்ற கேள்வியை அதிமுக எழுப்பியது.
இந்தப் பின்னணியில்தான் கடந்த சில நாட்களாக பாஜக ஐடி விங் பலமாக உடையத் தொடங்கியது. அதன் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் முதல் ஆளாக வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்து திலீப் கண்ணன், ஜோதி என பலரும் பாஜக முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதை அதிமுக தரப்பு பரபரப்பாக வெளிப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து ஆட்களைக் கூட்டி வந்துதான் கட்சியை நடத்தும் நிலையில் அதிமுக இருப்பதாக அண்ணாமலை பகிரங்கமாகவே எடப்பாடியை மட்டம் தட்டிப் பேசினார். அத்தோடு நில்லாமல், ஓ.பி.எஸ்.ஸின் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் மறைவு குறித்து துக்கமும் கேட்டறிந்தார். ஆனால் ஓ.பி.எஸ், தாயார் மறைந்து பல நாட்களாகிய நிலையில் மிகவும் தாமதமாக நேற்றுதான் போனார் அண்ணாமலை, குறிப்பாக எடப்பாடியுடன் மோதல் வெடித்த பின்னர்தான் ஓ.பி.எஸ். வீட்டுக்கு அவர் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தலைவர்களிடையே ஒருபக்கம் பூசல் ஓடிக் கொண்டுள்ள நிலையில் இப்போது இரு கட்சிகளின் அடுத்த நிலையினர் வார்த்தைப் போரில் குதித்துள்ளனர். அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் போட்ட ஒரு டிவீட்டில், NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLAக்களை வென்றது என்பதே இதற்கான பதில்! அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே என்று கூறியிருந்தார்.
அதற்கு பாஜகவின் செல்வக்குமார் அளித்துள்ள பதிலில், 2021 - கோவையில் 10/10 வெற்றி பெற்றதற்கு காரணம் பாஜக. 2022 - உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்ற அதிமுக கோவையில் 3/100 மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2023 - ஈரோட்டில் டெபாசிட் வாங்கவே பாஜக தயவு தேவைபட்டது. திமுகவை எதிர்க்க திராணியற்ற நிலையில், ஈரோடு கிழக்கு படு தோல்வியை திசை திருப்பவே பாஜவை சிண்டுகிறது அதிமுக (எ) என்று கடுமையாக சாடியுள்ளார். அதிமுக (எடப்பாடி) என்று அவர் கூறியிருப்பது முக்கியமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது.
மறுபக்கம்.. நான் இப்படித்தான் இருப்பேன்.. அக்சிவ் அரசியல்தான் தமிழ்நாட்டுக்கு சரிப்பட்டு வரும்.. நான் இட்லி தோசை சுட்டுத் தர இங்கு வரவில்லை.. நான் இப்படித்தான் இருப்பேன்.. தேவைப்பட்டால் இன்னும் கூட காரமாக பேசுவேன்.. என்னாலும் சாப்ட்டாக பேச முடியும்.. ஆனால் நான் பேச மாட்டேன்.. அப்படிப் பேசினால் இங்கு அரசியல்செய்ய முடியாது. ஒரு தேசியக் கட்சியாக நாம் செயல்பட வேண்டும் என்றால் இப்படித்தான் இருக்க முடியும்.. என்று கட்சித் தலைமைக்கும் அண்ணாமலை மறைமுகமாக ஒரு மெசேஜையும் விடுத்துள்ளார்.
அதிமுக, பாஜக மோதல் எந்த நிலையில் போய் முடியும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.