மதுரையில்.. மாஸ் காட்டத் தயாராகும் அதிமுக.. திரளும் தொண்டர்கள்.. நாளை மாநாடு!

Su.tha Arivalagan
Aug 19, 2023,01:39 PM IST
மதுரை: மதுரையில் நாளை மாஸ் காட்டத் தயாராகி வருகிறது அதிமுக. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மதுரையில் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் பஸ்கள், கார்கள், வேன்கள், ரயில்களில் மதுரை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் அதிமுக மாநாடு என்பதால் அவரது ஆதரவாளர்கள் உற்காசத்துடன் உள்ளனர். இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டுவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



இந்த மாநாட்டின் வெற்றி பாஜகவுக்கு பெரிய மெசேஜைக் கொண்டு செல்லும்... அதேபோல திமுகவுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.. கூடவே ஓபிஎஸ் தரப்புக்கும் ஆட்டம் கொடுக்கும் என்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் திட்டமாகும்.

மதுரை தமிழ்நாட்டு அரசியலில் தனி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். எனவே மதுரை மாநாட்டின் மூலம் அதிமுகவினரை எழுச்சி பெற வைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதனால்தான் மாநாட்டுக்கு கழக வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கி 50வது ஆண்டில் இருக்கிறது. எனவே நாளைய மாநாடு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டில் மாஸ் காட்டுவதன் மூலம் பாஜகவினரை சற்று அடக்கி வைக்க முடியும் என்று எடப்பாடி கருதுகிறார். மேலும் லோக்சபா தேர்தலின்போது அதிமுகவின் கை கூட்டணியில் ஓங்கி நிற்க இந்த மாநாட்டில் திரளப் போகும் அதிமுக தொண்டர்கள் உதவுவார்கள் என்பதும் அவரது கணக்காகும்


முக்குலத்தோர் அதிருப்தி

எடப்பாடி பழனிச்சாமி மீது தென் மாவட்டங்களில் முக்கியமான சமுதாயமான முக்குலத்தோர் சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்து அதில் முக்குலத்தோரை எடப்பாடியார் புறக்கணித்து விட்டார் என்பது அவர்களது குமுறலாகும். தற்போது மதுரைக்கு வரும் எடப்பாடியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர் அமைப்புகள் போல போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளன.

இருப்பினும் தனது ஆதரவு முக்குலத்தோர் தலைவர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயக்குமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை வைத்து இந்தப் பிரச்சினையை சமாளித்து வருகிறார் எடப்பாடியார்.