இன்று முதல் அக்னி நட்சத்திரம்.. உஷாரா வெளியில் போங்க மக்களே!
May 04, 2023,09:22 AM IST
சென்னை: கத்திரி வெயில் என்று செல்லமாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது.
வெயில் காலம் எனப்படும் கோடை காலம் உச்சத்தைத் தொடப் போகிறது என்பதன் அடையாளம்தான் அக்னி நட்சத்திர காலம். இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29ம் தேதி வரை நீடிக்கும்.
25 நாட்கள் நீடிக்கப்போகும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் சற்று அதிகமாக இருக்கும். எனவே வெளியில் நடமாடுவோர் உரியவழிமுறைகளைப் பின்பற்றி உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாத வெளிநடமாட்டத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக பகல் பொழுதுகளில் அதிகம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சன்ஸ்டிரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாக நேரிடும். அதிக அளவில் தண்ணீர், இளநீர், தர்பூஸ், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்து எதையும் குடிக்காதீர்கள். அது உடல் நலனைப் பாதிக்கும். அதற்குப் பதில் இளநீ ,மோர், மண்பானை தண்ணீர் போன்றவற்றை அருந்தலாம். அவை ஆரோக்கியத்திற்கு நல்லது. சூடான பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். சிக்கன் உணவையும் குறைத்தால் நல்லது. பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.