அயோத்தி.. ஹனுமான்கார்கி கோவிலில் மனைவியுடன் சாமி கும்பிட்டார் ரஜினிகாந்த்!

Su.tha Arivalagan
Aug 20, 2023,03:54 PM IST

லக்னோ: சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்  அதன் பின்னர் அயோத்தி சென்றார். அங்குள்ள ஹனுமன்கார்கி கோவிலுக்கு அவர் சென்று சாமி கும்பிட்டார்.


உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று அந்த மாநில துணை முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்த்தார். பின்னர் இரவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசினார். காரை விட்டு இறங்கியதும், யோகி ஆதித்யநாத்தின் காலைத் தொட்டு வணங்கி பின்னர் அவரது வீட்டுக்குச் சென்றார்.





இந்த நிலையில் இன்று தனது பயணத்தின் அடுத்தகட்டமாக சமாஜ்வாடி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை சந்தித்தார் ரஜினிகாந்த். அகிலேஷ் யாதவின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினார்.


இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,9 வருடத்திற்கு முன்பு மும்பையில் நடந்த விழா ஒன்றில் அகிலேஷ்யாதவை சந்தித்தேன். அப்போது முதலே அவர் எனது நண்பர். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம்.


5 வருடத்திற்கு முன்பு இங்கு ஒரு ஷூட்டிங்கிற்காக வந்திருந்தேன். அப்போது அவரை சந்திக்க முடியவில்லை. எனவேதான் இப்போது சந்தித்தேன் என்றார் ரஜினிகாந்த். மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது இல்லை என்று பதிலளித்தார் ரஜினிகாந்த்




ரஜினியை சந்தித்தது குறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், நான் மைசூரில்தான் என்ஜீனியரிங் படித்தேன். அப்போது ரஜினி காந்த் படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அந்த உணர்வுகள் இன்னும் அப்படியே உள்ளன. அவருடன்கடந்த 9 வருடமாக நல்ல நண்பராக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.


அகிலேஷ் சந்திப்பை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த், பின்னர் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையால் தான் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். அயோத்தி வந்தடைந்த ரஜினிகாந்த் அங்குள்ள ஹனுமன்கார்கி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் வந்திருந்தார்.