சென்னையிலும்.. பசுமை பந்தல்.. கத்திரி வெயில் கொடுமையிலிருந்து.. வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம்!

Manjula Devi
May 09, 2024,05:36 PM IST

சென்னை: போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வாகன ஓட்டிகள் தகிக்கும் தனலை சமாளிக்க, சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பந்தல்களை நிரந்தரமாக அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மே மாதத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை வெயில் கடுமையாக உள்ளது. இது தவிர வெயிலுடன் வெப்ப காற்றும் அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் நிலைமையை சொல்லவே வேண்டாம். எவ்வளவு வெயில் அடித்தாலும்.. மழை பெய்தாலும்.. சாலை சிக்னல்களில் வாகன ஓட்டிகள்  நின்று தான் செல்ல வேண்டும். ஏனெனில் பகல் நேரங்களில் ஒதுங்க கூட நிழல் இல்லாமல் உச்சி வெயிலில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். 




ஏற்கனவே தமிழக அரசு வெயில் காலத்தை சமாளிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைத்தல், ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளை  மேற்கொண்டது. அந்த வரிசையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் நிற்கும்போது வெயில் தாக்கத்தை சமாளிக்க, சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் நிழல் வேண்டும் என்பதற்காக பசுமை பந்தல்களை  அமைத்துள்ளது.


சமீபத்தில் புதுச்சேரியில் இந்த பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றது. அதேபோல கோவை உள்ளிட்ட ஊர்களிலும் இது அமைக்கப்பட்டது. இப்போது சென்னைக்கும் வந்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, எழும்பூர் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அண்ணாநகர், வேப்பஞ்சேரி, ராயப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், தேனாம்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை பந்தல்கள் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீ உயரத்தில்  அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர டிராபிக் போலீசார் மற்றும் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் தாகத்தை தணிப்பதற்கு குடிநீர் பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் கோடைகாலத்தில் மட்டுமல்லாமல் நிரந்தரமாக சாலை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.