பரபரப்பு வீடியோவிற்கு பின்...இன்று முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு...என்ன நடக்கும்?
Sep 16, 2024,10:45 AM IST
சென்னை : ஆட்சியின் பங்கு வேண்டும் என பேசி பரபரப்பு வீடியோ வெளியிட்ட பிறகு, இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்று சந்திக்க உள்ளார். இதனால் தமிழக அரசியலில் அடுத்த என்ன நடக்கும் என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, இரண்டு எம்.பி.,க்களை லோக்சபாவில் பெற்றது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வென்று பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதே கூட்டணியுடன் 2026ம் ஆண்டு வர இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும் தயாராக திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கான வேலைகளையும் திமுக ஏற்கனவே துவங்கி விட்டது.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கேட்டு தான் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டார். இரண்டு முறை இந்த வீடியோவை பதிவிட்டு, பிறகு இரண்ட முறை டெலிட் செய்தார். அதற்குள் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவ துவங்கி விட்டது. மீடியாக்களிலும் இதே பேச்சாக தான் இருந்தது. அதற்கு முன்பு தான், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக.,வை கலந்து கொள்ள வருமாறு விசிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, எதிர்க்கட்சியான அதிமுக.,விற்கு அழைத்த போதே, திமுக-விசிக கூட்டணியில் பிளவு, உரசல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு கிளம்பியது. ஆனால் அதற்கு விளக்கம் சொல்லி விசிக சமாளித்தது. அதிமுக.,விற்கு அழைப்பு விடுத்த அடுத்த இரண்டாவது நாளில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு திருமாவளவனே வீடியோ வெளியிட்டதால், திமுக-விசிக கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கும் தகவல் உண்மை தான் என பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர துவங்கினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்