பேஜர் வெடிப்பைத் தொடர்ந்து இப்போது வாக்கி டாக்கி பிளாஸ்ட்.. அதிர்ந்த லெபனான்.. 20 பேர் பலி

Manjula Devi
Sep 19, 2024,11:00 AM IST

பெய்ரூட்: லெபனான் நாட்டில் பேஜர் வெடிப்பைத் தொடர்ந்து தற்போது வாக்கி டாக்கி வெடிப்பு நடந்துள்ளது அந்த நாட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளன. இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


ஹிஸ்புல்லா போராளிகள், காஸாவில் நடந்து வரும் சண்டையில் இஸரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் இஸ்ரேல் உளவுத்துறையான மொசார்ட், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலிதான் சமீபத்தில் நடந்த பேஜர் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வாக்கி டாக்கி தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது.




லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் தகவல் தொடர்பு சாதனங்களை இஸ்ரேல் உளவு பார்ப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.  மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது அதிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது இஸ்ரேல்.


தெற்கு லெபனானில் கடந்த செவ்வாய் கிழமை பலர் கையில் வைத்திருந்த பேஜர்கள் வெடித்து சிதறியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தம் 5 ஆயிரம்  பேஜர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2800 பேர் காயமடைந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்  தகவல்கள் தெரிவித்தன.


இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எதுவும் கூறாமல் மௌனமாக இருந்து வருகிறது. ஆனால் பேஜர்கள் வெடித்து  சிதறிய சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசார்ட் இருப்பதாக வலுவாக நம்பப்படுகிறது. இந்தப் பின்னணியில் தற்போது வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியுள்ளன. லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவத்தால் லெபனானில் பதட்டம் அதிகரித்துள்ளது.  ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவங்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் என்று அமெரிக்காவும் இதைக் கண்டித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்