21 வயசே ஆன ரேவதியிடம்.. அத்துமீறிய புகாரில் சிக்கிய.. மலையாள நடிகர் சித்திக்.. ராஜினாமா!
திருச்சூர்: மலையாள நடிகை ரேவதி சம்பத்திடம் திருவனந்தபுரம் ஹோட்டலில் வைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிக்கிய பிரபல நடிகர் சித்திக், மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மலையாளத் திரையுலகம் சமீபத்தில் பெரும் புயலைச் சந்தித்தது.. நீதிபதி ஹேமா கமிட்டி, மலையாளத் திரையுலகில் பெண்களின் நிலை குறித்து ஆராய்ந்து தயாரித்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
மலையாளத் திரையுலகம் ஆணாதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 10 - 15 நடிகர்களின் கையில்தான் மலையாளத் திரையுலகம் சிக்கியுள்ளது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை யாராவது மீறினால் ஒழித்துக் கட்டி விடுவார்கள். மலையாளத் திரையுலகில் சுத்தமாக பெண்களுக்கு மதிப்பில்லை, மரியாதை இல்லை. பாலியல் அத்துமீறல்கள் மலிந்து கிடக்கின்றன. அட்ஜெஸ்ட் என்ற வார்த்தையைக் கடக்காமல் எந்தப் பெண்ணும் மலையாளத் திரையுலகில் நடிக்க முடியாது என்று பல பரபரப்பான தகவல்கள் அதில் கூறப்பட்டிருந்தன.
இந்த அறிக்கை வெளியான பிறகு பாதிக்கப்பட்ட நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள், தொல்லைகள் குறித்து பகிரங்கமாக பேச ஆரம்பித்துள்ளனர். அதில் முக்கியமானதாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து விவரித்திருந்தார். அவர் புகார் கூறிய நபர் பிரபலமான நடிகரான சித்திக் ஆவார். இவர் மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தன் மீதான புகார்களைத் தொடர்ந்து நடிகர் சித்திக், அம்மா பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மா சங்கத் தலைவர் நடிகர் மோகன்லாலிடம் அவர் வழங்கியுள்ளார். இதனால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு கூடியுள்ளது. அடுத்து யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பும் கூடியுள்ளது.
ரேவதி சம்பத்துக்கு நடந்தது என்ன?
முன்னதாக நடிகை ரேவதி சம்பத், சித்திக் தன்னிடம் செய்த சேட்டைகள் குறித்து திருச்சூரில் செய்தியாளர்களிடம் விவரித்துக் கூறியிருந்தார். அதில் அவர் கூறிய புகார்கள்:
நான் பிளஸ்டூ படிப்பை முடித்த பிறகு நடிக்க ஆர்வம் காட்டி வந்தேன். அப்போது எனக்கு மிகவும் துயரமான அனுபவம் நடந்தது. அப்போது எனக்கு 21 வயது இருக்கும். பேஸ்புக் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார் சித்திக். தன்னை நேரில் சந்திக்குமாறு அவர் அழைத்தார். நானும் அவர் கூறிய திருவனந்தபுரம் ஹோட்டலுக்குச் சென்றேன். அப்போது என்னிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீற ஆரம்பித்தார். நான் அவரைப் பற்றி நினைத்ததற்கு நேர் மாறாக அவரது சுய ரூபம் இருந்தது.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னிடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அத்துமீறி நடந்து கொண்டார். அவர் ஒரு கிரிமினல். அவரால் நான் பெரும் மன உளைச்சலுக்குள்ளானேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலிருந்து வெளி வர நான் நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டேன். இத்தனை நடந்த பிறகும் கூட வெகு சாதாரணமாக இருந்தார் சித்திக். அவர் செய்தது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் பலருக்கும் கூட தெரியும். ஆனால் யாருமே எதுவுமே நடக்காதது போலவே இருந்தனர்.
ஹோட்டலில் அவர் என்னிடம் பேசியபோது தனது மகன் தமிழில் நடிக்கவிருப்பதாகவும், அந்தப் படத்தில் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றும் கூறினார். அட்ஜஸ்ட் செய்ய ரெடியா என்றும் பகிரங்கமாக கேட்டார். அப்போது எனக்கு அது புரியவில்லை. இதனால் அப்படின்னா என்ன என்று கேட்டேன். உடனே தனது இழிவான செயலை அவர் தொடங்கி விட்டார். பிறகுதான் அவரது எண்ணம் புரிந்தது. அவரிடமிருந்து நான் எப்படியோ தப்பித்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி எனது வீட்டுக்குப் போய் விட்டேன் என்று கூறியிருந்தார் ரேவதி சம்பத்.
இதேபோல கேரள திரைப்படப் பயிற்சிக் கல்லூரி தலைவர் ரஞ்சித் மீதும் பாலியல் அத்துமீறல் புகார்கள் எழுந்தன. நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் அவர் மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து ரஞ்சித்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்