சந்திரயான் 3... வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியாச்சு.. அடுத்து என்ன?
Aug 24, 2023,09:42 AM IST
டெல்லி : நிலவில் சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியதை அடுத்து இந்தியா, விண்வெளி ஆய்வில் புதிய வரலாறு படைத்துள்ளது. அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சந்திரயான் 3, நிலவில் தரையிறங்கி விட்டது. இப்போது அடுத்து என்ன நடக்கும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஜூலை 13 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக நேற்று மாலை நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியதுடன், அங்கிருந்து நிலவின் முதல் போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவிற்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சந்திரயான் 3 ல் இருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கியது வரை அனைவரின் கவனமும் விக்ரம் லேண்டர் மீது மட்டும் இருந்தது. தற்போது அனைவரின் கவனமும் பிரக்யான் ரோவர் மீது திரும்பி உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் ரோவரும் வெற்றிகரமாக லேண்டரை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டது. இனி அது நிலவின் நிலப்பரப்பின் மீது தனது ஆய்வுப்பணிகளை துவங்கும். விக்ரம் லேண்டர் மற்றம் ரோவர் ஆகியவை இணைந்து நிலவின் போட்டோக்களை பூமிக்கு அனுப்ப துவங்கும்.
நிலவின் கணக்குப்படி இவை ஒரு நிலவு நாள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளன. பூமியின் கணக்குப் படி இது 2 வாரமாகும். வாய்ப்பு கிடைத்தால் மேலும் 2 வாரங்களுக்கு பிரக்யான் ரோவர் ஆய்வு நடத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. நிலவின் நிலப்பரப்பில் ஒரு விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வீதத்தில் ரோவர் பயணம் செய்யும். ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்பை ஆய்வு செய்த பிறகு அது தொடர்பான போட்டோக்கள், அந்த நிலப்பரப்பு குறித்த விபரங்களை பூமிக்கு அனுப்பும்.