கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்.. மனிதர்களுக்குப் பரவாதாம்.. அதிகாரிகள் தகவல்!
திருச்சூர்: திருச்சூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பாதிப்பு பன்றிகளுக்கு மட்டுமே பரவும், மனிதனுக்கு பரவாது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மடக்குத்தர பஞ்சாயத்து பகுதிகளில் பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கடந்த சில நாட்களாக பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து பன்றிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் அப்பன்றிகள் மீது சோதனை நடத்தப்பட்டது. இதில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தொற்று ஒரு பன்றியிலிருந்து இன்னொரு பன்றிக்கு மட்டுமே பரவ கூடியது. இது மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதருக்கோ பரவாது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அந்த பன்றி பண்ணைகளில் மீதமுள்ள 310 பன்றிகளையும் கொல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பண்ணையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாத வண்ணம் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கால்நடை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.