குழந்தைகளுக்கு எதைச் சொல்லித் தரணும்.. அதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.. வனிதா விஜயகுமார்

Meenakshi
Jan 09, 2024,01:40 PM IST

சென்னை: குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று 

இமெயில் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.


இமெயில் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில்  தயாராகி உள்ளது. எஸ் ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ் ஆர் ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் இமெயில். இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். 




மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.  

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். 


வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, இந்த தலைப்பிற்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இமெயில் என்றாலே இன்று எல்லோருக்கும் தெரியும். இந்தப்படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது. கேம் என்றாலே பிரச்சினைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி எந்த கேமாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நமது மனது ஈடுபடத்தான் செய்யும். 


நாம் என்னதான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால் அது இந்தக்கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. எனது மூன்று வயது மகள் கூட மொபைல் மூலமாக ஆன்லைனில் பணம் கட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். 


அதேசமயம் குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று கூறினார்.