"குறுக்கே வந்த கெளஷிக்".. அதிமுக டார்கெட் அண்ணாமலை இல்லை.. இவர்தானாம்!!!
Sep 20, 2023,09:44 AM IST
சென்னை: அண்ணாமலையைக் குறி வைத்து அதிமுக திடீர் ஆவேசம் காட்ட என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்க்கும்போது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. உண்மையில் அதிமுகவின் டார்கெட் அண்ணாமலை இல்லையாம்.. மாறாக "ஓ.பி.எஸ்"தானாம்!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், தினகரன் என அனைவருமே ஒன்றாகத்தான் இருந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி லைம்லைட்டிலையே இல்லை. ஓபிஎஸ் வசம் இருந்த முதல்வர் பதவியைக் கைப்பற்ற சசிகலா திட்டமிட்டார். ஓபிஎஸ்ஸும் முதல்வர் பதவியை விட்டு விலகினார். ஆனால் அதிரடித் திருப்பமாக சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போகும் நிலைமை ஏற்பட்டு விட்டது. சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமியை அடையாளம் காட்டி முதல்வர் பதவியில் அமர வைத்து விட்டுப் போனார்.
ஒருங்கிணைந்த ஓபிஎஸ் - இபிஎஸ்: அதன் பின்னர் எடப்பாடி தலைமையில் மேற்கு மாவட்டங்களின் ஆதிக்கத்திற்குள் போய் விட்டது. தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவர் பலமுனைகளில் அதிமுகவைக் கைப்பற்ற முயற்சித்துப் பார்த்தார் நடக்கவில்லை. ஓ.பி.எஸ். பல முனைகளில் போராடிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. பின்னர் பாஜக மேலிடத்தின் உத்தரவின் பேரில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் ஒருங்கிணைந்தனர்.
இணைந்திருந்த இருவரும் சில மாதங்களுக்கு முன்பு ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் விட்டனர். இவர்கள்தான் பிரிந்து போனார்களே தவிர பாஜக மேலிடத்தின் அன்பும், அரவணைப்பும் இன்னும் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸால் நிச்சயம் தமக்கு உதவ முடியும் என்று வலுவாக நம்புகிறது பாஜக. இதன் காரணமாகவே அது இன்னும் ஓபிஎஸ்ஸை முழுமையாக உதறவில்லை. கூடவே வைத்துக் கொள்ளவே விரும்புகிறது.
ஓபிஎஸ்ஸுக்கும் சீட்: வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட ஓபிஎஸ் தரப்புக்கும் சீட் தர பாஜக முடிவு செய்துள்ளது. அதாவது அவரது மகன் ரவீந்திரநாத்தை மீண்டும் தேனியிலேயே போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளது. தாமரைச் சின்னத்தில் ரவீந்திரநாத் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அதேபோல தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கக் கூடும் என்ற கருத்து உள்ளது.
டெல்லியில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தபோது இதுகுறித்தெல்லாம் அமித்ஷா பேசியதாகவும் நம்பப்படுகிறது. அதையெல்லாம் கேட்டு ஜெர்க் ஆகி விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. நாம் யாரையெல்லாம் ஆகாதுன்னு ஒதுக்கி வைக்கிறோமோ அவர்களையெல்லாம் பாஜக கூட்டி வந்து குலாவ வைக்கிறதே என்று அப்செட் ஆகிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் கோபத்தையெல்லாம் அமித் ஷாவிடம் காட்ட முடியாதே.. இதனால் எதுவும் பேசாமல் திரும்பி விட்டார் எடப்பாடியார்.
வாலன்டியராக சிக்கிய அண்ணாமலை வாய்: இந்த நேரத்தில்தா் வாலன்டியராக வந்து சிக்கியது அண்ணாமலையின் "வாய்".. பேரறிஞர் அண்ணா குறித்து அவர் எதையோ பேசப் போக அதைப் பிடித்துக் கொண்டு விட்டது அதிமுக தலைமை. எடப்பாடியாரின் தீவிர ஆதரவாளர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு போன்றோர் கடுமையாக அண்ணாமலையை விமர்சித்தனர். இதை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் அவரும் கடுப்பாகி வாயை விட்டு மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.
ஆனால் தீவிர மோடி ஆதரவாளரான ராஜந்திர பாலாஜி இதுவரை அண்ணாமலை கருத்துக்கு எந்தவிதமான பதிலும் தரவில்லை என்பதையும் இங்கு சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். அதேபோல திண்டுக்கல் சீனிவாசனோ அல்லது வேறு யாருமோ கூட பேசாமல்தான் உள்ளனர். நத்தம் விஸ்வநாதனும் பேசவில்லை. பலரும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.
"குறுக்கே வந்த கெளஷிக்": குறிப்பிட்ட சிலர மட்டுமே எடப்பாடியார் பேச வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படிப் பேசினால்தான் பாஜக நம்மிடம் சமரசத்திற்கு இறங்கி வரும். அப்படி வரும்போது ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை இணைக்கக் கூடாது, நீண்ட காலமாக குடைச்சல் தரும் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று திட்டவட்டமான கோரிக்கையை வைக்க எடப்பாடி தரப்பு ஆர்வத்துடன் காத்திருக்கிறதாம். மற்றபடி அண்ணாமலை மீதோ அல்லது பாஜக மீதோ கட்சி மேலிடத் தலைவர்களுக்கு கோபம் எல்லாம் கிடையாதாம். பாஜகவை பகைத்துக் கொண்டால் பத்து நிமிடம் கூட நிம்மதியாக வாழ முடியாது என்பதை அவர்கள் உணராமல் இல்லை.
அவர்களது ஒரிஜில் டார்கெட் ஓபிஎஸ்தான்.. குறுக்கே வந்த கெளஷிக் மாதிரி அண்ணாமலை குறுக்கிட்டு விட்டதால் அவரை வைத்து ஓபிஎஸ்ஸை டார்கெட் செய்ய திட்டமிட்டுள்ளதாம் அதிமுக. ஆனால் இதை அமித் ஷா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.. ஒரு வேளை அமித் ஷா நேரில் கூப்பிட்டு பேசினால்.. அவரிடம் தைரியமாக தனது ஆட்சேபனையை எடப்பாடியாரால் வைக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அண்ணாமலை மிரட்டல்: மறுபக்கம் அண்ணாமலை தனது பேட்டியின்போது இங்கு ஊழல் கண்காணிப்பு துறை உள்ளது. அதையெல்லாம் மறந்து விடக் கூடாது. எங்க உதவியும் தேவைப்படும். கூட்டணியே வேண்டாம்னு சொல்ல யாராலும் முடியாது. அது என்ன பேச்சு அப்படி பேசுறது.. கூட்டணி வேண்டாம்னு சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கு இங்கு என்று மறைமுகமாக அதிமுகவுக்கு மிரட்டலும் விட்டுள்ளார். அதாவது கூட்டணியை விட்டு விலகினால் ரெய்டுகள், கைதுகள் அடுத்தடுத்து பாயும் என்பதே இதன் மறைமுகமாக சாராம்சம்.