அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கிண்டி புறப்பட்டனர்
சென்னை: சென்னை வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புறப்பட்டுச் சென்றனர். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர்கள் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி அதிமுக- பாஜக இடையேயான கூட்டணியை உறுதி செய்ய நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருகிறது. இதற்காக சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி முனுசாமி ஆகியோர் சந்திக்க திட்டமிட்டனர்.
இருப்பினும் இந்த சந்திப்பு காலையிலிருந்து நடைபெறவே இல்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது. அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் ஒரே கோரிக்கை. இதனால் புதிய தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்குவது முடியும் வரை காத்திருக்க எடப்பாடி பழனிச்சாமி தீர்மானித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பிற்பகலில் புதிய தலைவருக்கான விருப்ப மனுக்கள் வழங்குவது முடிவுற்ற நிலையில் தற்போது மாலை 5 மணியளவில் கிண்டி ஹோட்டலில் அமித்ஷாவைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிகிறது .
தமிழிசை இல்லத்தில் அமித்ஷா
இதற்கிடையே மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லம் சென்றார். டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து அமித்ஷா இரங்கல் தெரிவித்திருந்தார். தற்போது சென்னை வந்திருப்பதால், தமிழிசையை நேரிலும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.