அதிமுக உட்கட்சி விவகாரம்.. பிப்., 12ல் தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

Meenakshi
Feb 07, 2025,05:48 PM IST

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரும் மனுக்கள் மீது பிப்ரவரி 12ல்  தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.


அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றும் நடைபெற்றது.




அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் உட்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது. புதிய சட்டத் திட்டங்களை கொண்டு வந்தது தொடர்பான விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும் கட்சியில் எந்த பிளவும் இல்லை. தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு நீடிக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றார்.


இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும் தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.  அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்