நிர்மலா சீதாராமனுடன் 3 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு!
கோவை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
பாஜக கூட்டணியிலிருந்து விலகியதாக அதிமுக அறிவித்து விட்டது. விலகியது விலகியதுதான், அதுதான் இறுதி என்று நேற்று கூட எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால் அதிமுகவின் அறிவிப்பையும், செயல்பாடுகளையும் பலரும் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சென்று சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இருவரின் சந்திப்பின் போது அண்ணாமலை தனது பாணியில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் இல்லை என்றால் பாஜகவில் இருந்து தான் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தப் பின்னணியில்தான் நேற்று சேலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில், பேசிய கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. இது இறுதியானது என்று அடித்துப் பேசியிருந்தார்.
ஆனால் இன்று திடீரென ஒரு புதுக் காட்சி அரங்கேறியது. நேற்று அண்ணாமலையைச் சந்தித்த நிலையில் இன்று கோவை வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரை இன்று அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் சந்தித்துப் பேசி அனைவருக்கும் சர்ப்பிரைஸ் கொடுத்தனர். பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ் ஆகியோரே அந்த எம்எல்ஏக்கள். இந்த சந்திப்பின்போது கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக சொல்லிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் என்னவாக இருக்கும் என்று அனைத்து தரப்பினரும் பரபரப்பாக முனுமுனுக்கின்றனர். அனைவரின் கேள்வியும் இப்போது ஒன்றுதான்.. இந்த சந்திப்பு எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா.. தெரிந்து நடந்தது என்றால் என்ன காரணத்திற்காக சந்தித்தார்கள்.. தெரியாமல் நடந்தது என்றால் இவர்கள் மீது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக நடவடிக்கை பாயுமா என்பதுதான்.
பார்க்கலாம்.. வெயிட் அன் சி!