சட்டசபையில் அமளி.. அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்.. பாமக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

Manjula Devi
Jun 21, 2024,09:05 PM IST

சென்னை:   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்ட விதிகளை மீறி கேள்வி நேரத்தில் முழக்கம் எழுப்பி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.


கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நடந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். தமிழக அரசு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அறிவித்தது.  கள்ளக்குறிச்சி சாராய நிகழ்வு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில்,  முக்கிய குற்றவாளியான மாதேஷ் என்பவரை போலீசார்  கைது இன்று செய்துள்ளனர். மேலும் சிலரும் கைதாகியுள்ளனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை நேற்று கூடிய நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று  இரண்டாவது  நாள் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. சட்டசபைக்கு அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். அப்போது அவையில் கேள்வி நேரம் தொடங்கியது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சிவிஷ சாராயம் நிகழ்வு தொடர்பாக  சட்ட விதிகளை மீறி கேள்வி நேரத்தில் முழக்கம் எழுப்பி, கடும்  அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சட்டசபை முனைவர் துரைமுருகன் பேச ஆரம்பித்தார். ஆனால் அதனையும் கேட்காமல், அதிமுக உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டனர்.


இதனை அடுத்து  சபாநாயகர் அப்பாவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் பேச அனுமதி கொடுத்தார். ஆனால் அதையும் மீறி அதிமுகவினர் கடும் கூச்சலில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்தபடியும் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து  அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க  முடியாது என  உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை குண்டுகட்டாக வெளியேற்ற அவை காவலர்களுக்கு  உத்தரவிட்டார்.


இதன் பின்னர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்ட நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 




இதற்கிடையே, சபை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், கள்ள சாராய விபத்து தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படும். முக்கிய விவாதங்கள் குறித்து பங்கேற்க அனைவருக்கும் உரிமை உண்டு. சட்டசபையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது. அந்த நேரத்தில் எந்த விவாதத்தையும் எடுக்க முடியாது என்பது விதி. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தவர். அவருக்கும் சட்டம் தெரியும். தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


இதற்கிடையே, இதே விவகாரத்தை வலியுறுத்தி பாமக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.