சட்டப்பேரவையில் அமளி..அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்!

Meenakshi
Mar 28, 2025,05:15 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.


தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச தொடங்கினார். அப்போது, முன்னறிவிப்பு இல்லாமல் பேச அனுமதி கோரிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.




மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் பதில் கூறினார். இதனால், பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். முன் அனுமதி பெற்றே பேச வேண்டும் என கடந்த ஆட்சியில் சபாநாயகர் தனபால் கூறியதே, இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பதில் கூறினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தயாராக உள்ளேன். டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள் என கூறினார்.


இருப்பினும் தொடர்ந்து, அதிமுகவினர்  அமளியில் ஈடுபட்டதால் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டபின் அவர்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.