ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. ஏன் என்கவுண்டர் பண்ணீங்க?.. சிபிஐக்கு மாத்துங்க.. எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கியப் பங்காற்றியவரான திருவேங்கடம் என்ற ரவுடியை இன்று காலை மதுரவாயல் பகுதியில் வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இது பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவேங்கடம்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட கும்பலில் முக்கியமான ஆளாம். மேலும் இவர்தான் முதலில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி நிலை குலைய செய்தவராம். அவரால் தப்பி ஓட முடியாத அளவுக்கு மோசமாக வெட்டியவர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தென்னரசு என்பவரையும் கொலை செய்தவர்தான் இந்த திருவேங்கடம் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் திருவேங்கடம் என்கவுண்டருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.. அதிகாலை பரபரப்பு!
கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது. இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!
இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.