நான் டெல்லிக்கு வந்தது இதுக்குத்தாங்க.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்!

Meenakshi
Mar 25, 2025,05:39 PM IST

டெல்லி:  பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திடீர் என டெல்லிக்கு  பயணம் மேற்கொண்டார். எந்த அறிவிப்பும் இன்றி அவர் சென்ற பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. 




இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்க செல்கிறார் என்று எனக்கு தெரியும் என்று  தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் பேசுகையில், நீங்கள் டெல்லிக்கு செல்வது ஏன் என்று தெரியும். யாரை பார்க்க போகிறீர்கள் என்று தெரியும். மற்ற விஷயல்களை பேசும் போது, மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் பேசுங்கள் என்று கூறியிருந்தார் .


அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து தான்  பேச டெல்லி சென்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதங்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், டெல்லிக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து விளக்கம் அளித்து கூறியதாவது, 


பிரத்யேகமான நபர் யாரையும் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன் என்று கூறினார். கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை காணொளி வாயிலாக எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.


இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணையவுள்ளதாக டெல்லி வட்டாரங்களி்ல பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக மட்டுமல்லாமல், தேமுதிகவும் கூட மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பவுள்ளதாகவும் பரவலாக பேச்சு அடிபடுகிறது. வரும் நாட்களில் ஏதாவது தகவல் வெளியாகலாம் என்று சொல்கிறார்கள்.