ஜல்லிக்கட்டு மேடையில்.. கலெக்டரை நிற்க வைத்தது நியாயமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
சென்னை: அலங்காநல்லூரில் துணை முதல்வருடைய மகனின் நண்பர்கள் அமர்வதற்காக கலெக்டரை நிற்க வைத்தது நியாயமா? மன்னராட்சியின் சர்வாதிகாரம் தலை தூக்கியிருப்பதற்கு இது ஒரு சாட்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுக தலைமை கழகத்தில் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா தரப்பட்ட மக்களும் உண்மையாக போற்றக்கூடிய தலைவராக எம்ஜிஆர் இருந்துள்ளார். இது போல கருணாநிதிக்கு செய்கிறார்களா? இல்லை. என்ன திரை போட்டு மு.க.ஸ்டாலின் மூடினாலும் அதிமுகவை அழிக்கவோ மறைக்கவோ முடியாது. ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அதிமுகவின் முடிவு. போலியான வெற்றியை பெற திமுக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். இது கட்சி எடுத்த முடிவு தான். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 கொடுத்த போது 5,000 கொடுக்கலாமே என்று மு.க.ஸ்டாலின் அபோது கூறினார். தற்போது பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டாம். ரூ.2,500வது கொடுத்திருக்கலாம். ரூ.2,500 கொடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை ரூ.1000மாவது கொடுத்து இருக்கலாம்.ஆனால், அதுவும் கொடுக்காமல் பட்டை நாமம் போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்.
அலங்காநல்லூரில் துணை முதல்வருடைய மகனின் நண்பர்கள் அமர்வதற்காக கலெக்டரை நிற்க வைத்தது நியாயமா? மன்னராட்சியின் சர்வாதிகாரம் தலை தூக்கியிருப்பதற்கு இது ஒரு சாட்சி. ஒரு அமைச்சர் மரியாதைக்காக துணை முதல்வருக்கு சால்வை போடலாம். ஆனால் அவருடைய மகனுக்கு சால்வை போட என்ன அவசியம்?.
குருமூர்த்தி ஏற்கனவே என்கிட்ட பலதடவை வாங்கிக் கட்டிக் கொண்டார். குருமூர்த்தி வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்