ஜெயலலிதாவின் charisma எடப்பாடி பழனிச்சாமியிடம் இல்லையா?.. அதிமுகவை அதிர வைத்த ரிசல்ட்!

Su.tha Arivalagan
Jun 04, 2024,02:00 PM IST

சென்னை: அதிமுக வட்டாரத்திற்கு மிகப் பெரிய சோகச் செய்தியாக 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஜெயலலிதா, ஜெயலலிதாவை மிஞ்சியவர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தைக் கொடுப்பதாக இந்த ரிசல்ட் வந்து சேர்ந்துள்ளது.


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள்.. அப்படிச் சொல்வதை விட திட்டமிட்டு அது சிதைக்கப்பட்டது. சிதறடிக்கப்பட்டது. முக்கியத் தலைவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டார்கள் அல்லது  கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். கட்சி முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி கையில் வந்தது. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி  பழனிச்சாமி கிட்டத்தட்ட ஜெயலலிதா பாணியிலேயே கட்சியை நடத்த ஆரம்பித்தார்.




ஜெயலலிதாவைப் போல போகும் இடமெல்லாம் வரவேற்பு, ஜெயலலிதாவைப் போலவே அதிரடியான முடிவுகள், ஜெயலலிதாவைப் போலவே பேச்சு என்று அவர் போலவே நடக்க ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய ஏமாற்றத்தையே அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் கொடுத்துள்ளது.


அதிமுக தோன்றிய காலம் முதல் இதுவரை பல முறை பெரும் தோல்விகளை அது சந்தித்துள்ளது. ஆனால் ஒருமுறை கூட அந்தக் கட்சி தோற்று, அதன் கூட்டணிக் கட்சி வென்ற வரலாறு நடந்ததில்லை. அந்த வரலாறு இந்த முறை உருவாகி விடுமோ என்ற சூழலில் அக்கட்சி இருந்தது. காரணம், போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வி முகத்தில் இருக்கிறது. பல தொகுதிகளில் 3வது இடத்திலும் சில தொகுதிகளில் நான்காவது இடத்திலும் அந்தக் கட்சி உள்ளது. 


இதை விட பெரிய சோதனையாக, விருதுநகர் தொகுதியில் அதிமுகவின் பலத்துடன் கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அங்கு மாறி மாறி முன்னணியில் இருந்து வருகிறார். இந்தத் தொகுதியில் தேமுதிகவுக்கு ஓரளவு பலம் இருந்தாலும் கூட அதிமுகவினர் மிகத் தீவிரமாக விஜய பிரபாகரனுக்காக பணியாற்றினர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முழுமையாக விஜய பிரபாகரனுடன் இருந்து தேர்தல் பணியாற்றினார்.  விஜய பிரபாகரனுக்கு அவ்வப்போது அதிர்ஷ்டம் வந்து வந்து செல்லும் நிலையில் அப்படி ஒரு அதிர்ஷ்டம் அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.


எந்த ஒரு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னணியில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பின்னடவைதில்தான் அதிமுக வேட்பாளர்கள் இருந்து வருகின்றனர். கோவையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன் 3வது இடத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் கோவை, அதிமுகவின் கோட்டையாக கருதப்படுவது. அதேபோல நாமக்கல் தொகுதியிலும் அதிமுகவுக்கு பின்னடைவுதான். தனது பெரும் நம்பிக்கையாக இருந்து வரும் கொங்கு மண்டலத்திலேயே அதிமுக மிகப் பெரிய சரிவை கண்டிருப்பது அந்தக் கட்சியின் இருப்புக்கே  ஆப்பு வைப்பது போல உள்ளதாக கருதப்படுகிறது.


எடப்பாடி பழனிச்சாமி நீக்குப் போக்கான தலைவராக இல்லாததே இந்த பெரும் பின்னடைவுக்குக் காரணமாக கருதப்படுகிறது. எப்படி அண்ணாமலையால் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டதோ அதேபோல எடப்பாடியாரால்தான் அதிமுகவுக்கும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அனைத்துத் தலைவர்களையும் அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் கட்சிக்குள் வைத்திருக்க முயன்றிருக்க வேண்டும். முடிந்தால் தினகரனையும் கூட உள்ளே  இழுத்துப் போட்டிருக்க வேண்டும். அதை விட முக்கியமாக பாமகவை கூட்டணிக்குள் எப்படியாவது இழுத்திருக்க வேண்டும்.  பல விஷயங்களில் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை விட்டதால்தான் இன்று கூட்டணி கட்சிக்குக் கிடைத்த சந்தோஷம் கூட அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.


எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அதிமுக. முதலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவிடம் ஆட்சியை இழந்தது. அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. கடந்த லோக்சபா தேர்தலிலும் திமுகவிடம் பெரும் தோல்வியைத் தழுவியது. இப்போதும் மிகப் பெரிய தோல்வியை அதிமுக பெற்றுள்ளது. கடந்த முறையாவது ஒரு சீட் கிடைத்தது. இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. 


அதேபோல பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரியாக வந்திருக்கும் என்பதையும் இந்தத் தேர்தல் உணர்த்துகிறது. அந்த வாய்ப்பைுயம், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோரின் மனப் போக்கு கெடுத்து விட்டதாகவும் இரு கட்சியனரும் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.


தேர்தல் முடிவுகள், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு நிச்சயம் சவாலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான், வாக்கு சதவீதம் தெளிவாக தெரிந்த பின்னர்தான் அதிமுகவுக்கு இந்த தேர்தல் நலம் பயத்ததா அல்லது மேலும் பலவீனமாக்கப் போகிறதா என்பதை சொல்ல முடியும்.. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது.. எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம், ஜெயலலிதா அல்ல என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.