ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் : அதிமுக அதிரடி அறிவிப்பு
Jan 11, 2025,05:22 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறப்பணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 05ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் போட்டியிட போகின்றன, எந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தமிழக அரசியல் களமே பரபரத்தது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தான் தங்கள் கட்சி போட்டியிட உள்ளதாக விஜய் கட்சியின் தலைமை அறிவித்து விட்டது. இதனால் பிரதான கட்சிகளான திமுக- அதிமுக கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்கள்? திமுக கூட்டணி சார்பில் யாருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் இந்த முறை காங்கிரஸ் அல்லாமல் திமுக., கட்சியே களம் காணும் என்றும், வேட்பாளராக சந்திரசேகரன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(ஜனவரி 11) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது. ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்ற காரணத்தால் இடைத் தேர்தலை புறகணிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்