"மா.செ. ஜெயசுதா".. ஜெ.  கூட செய்யலையே.. திரும்பிப் பார்க்க வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

Su.tha Arivalagan
Sep 28, 2023,10:28 AM IST

சென்னை: அதிமுக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்து அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


ஜெயலலிதா காலத்தில் கூட பெண்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதில்லை. வேறு கட்சிகளிலும் கூட இப்படி பெண்களுக்கு மாவட்ட கட்சி நிர்வாகப் பதவிகள் வழக்கமாக கொடுக்கப்படுவதில்லை. அது ஆண்களால் மட்டுமே வகிக்க முடியும் என்று இவர்களாகவே நினைத்துக் கொண்டு செயல்படுவது வழக்கம். அதிமுகவும் கூட அப்படித்தான் இருந்து வந்தது.




ஆனால் முதல் முறையாக அதிமுகவில் ஒரு பெண்ணுக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்து அசத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தப் பெருமையைப் பெற்றிருப்பவர் எல். ஜெயசுதா. முன்னாள் எம்எல்ஏவான திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்.


போளூர் சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எல்ஏவாக இருந்தவர் ஜெயசுதா.  2016 சட்டசபைத் தேர்தலில் இவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. பிஏ. படித்துள்ள இவருக்கு கணவர், 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயசுதா, போளூர் ஒன்றியச் செயலாளராக இதுவரை இருந்து வந்தார். தற்போது மாவட்டச் செயலாளராக உயர்வு பெற்றுள்ளார்.


அதிமுகவில் பெண் ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதை அக்கட்சியினர் குறிப்பாக அக்கட்சியின் மகளிர் அணியினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி பழனிச்சாமி


எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா ஸ்டைலில் அடுத்தடுத்து வேகம் காட்டி அதிரடியாக செயல்படுவதாக அக்கட்சியினர் சிலாகிக்கின்றனர். பாஜகவுக்கு எதிராக அதிரடியான முடிவை எடுத்தார்கள். அதை அறிவித்த கையோடு அடுத்து வேலைக்குப் போய் விட்டது அதிமுக.


இப்போது பாஜகவை தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் பெண் ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்து தொண்டர்களையும் தன் பக்கம் அழுத்தம் திருத்தமாக ஒருங்கிணைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறார்கள்.


பொறுத்திருந்து பார்க்கலாம்.