"அதிமுக பாஜக மோதல்".. பேசிட்டிருக்காங்க.. "சேதி வரும்".. சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

Su.tha Arivalagan
Sep 28, 2023,03:07 PM IST

சென்னை:  அதிமுக - பாஜக தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல சேதி வரும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.


அதிமுக - பாஜக மோதல் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்போது அவர் கூறியதாவது:




ஒரு கூட்டு குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வரும்போது அந்த குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அது போல பாஜக -அதிமுக இடையே முறிவு ஏற்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.


கூட்டணியாக இருக்கும் பட்சத்தில் 40க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் இந்த சூழ்நிலையில் பிரிய வேண்டுமா... கூட்டணியை தீர்மானிக்கும் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள், அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி  வருகிறார்கள். பேச்சுவார்த்தை சமூகமாக நடந்து வருகிறது .விரைவில் நல்ல முடிவு வரும் என டெல்லி  தலைவர்கள் கூறுகின்றனர். 


புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரை பாஜக -அதிமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். கூட்டணியை பொறுத்தவரை இவர்கள் பெரிது, இவர்கள் சிறிது என பிரித்துப் பார்க்கக் கூடாது. எல்லாருடைய பங்களிப்பும் முக்கியம் . கூட்டணிக்கு என்று தர்மம் உண்டு. கூட்டணியில் இருக்கும் போது கசப்பான , முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.