Seeman is Powerful.. "புகாரை வாபஸ் பெறுகிறேன்".. விஜயலட்சுமி திடீர் அறிவிப்பு

Su.tha Arivalagan
Sep 16, 2023,05:18 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் மோசடி புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி திடீரென அறிவித்துள்ளார்.


அழுது புலம்பியபடியும், ஆவேசமான கோலத்துடனும் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை சுமத்தி வந்த நடிகை விஜயலட்சுமி தற்போது மிகவும் நிதானத்துடன், எனக்குப் போதிய ஆதரவில்லை. சீமான் சக்தி வாய்ந்தவர்.. எனவே புகாரைத் திரும்பப் பெறுகிறேன்.. பெங்களூருக்கே போகிறேன்.. இனிமேல் இதை மீண்டும் பேசப் போவதில்லை என்று மெல்லிய புன்னகையுடன் கூறி விடை பெற்றுள்ளார்.




சீமான் மீது புகார் கூறிய விஜயலட்சுமிக்கு, வீரலட்சுமி என்ற பெண் அரசியல்வாதி துணையாக நின்றார். இருவரும் இணைந்துதான் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். அங்கு வைத்து ஆவேசமாகவும் பேசினர். மேலும் சீமான் மீது வீரலட்சுமி கடுமையாகவும் தாக்கிப் பேசினார். சீமான் குரூப் காட்டும் ஜோக்கையெல்லாம் எனது 17 வயசிலேயே பாத்துட்டேன்.. எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. அதையெல்லாம் தாங்க மாட்டீங்க.. அவதாரம் எடுத்தா நாம்தமிழர் கட்சியையே அழிச்சிடுவேன் என்றெல்லாம் ஆவேசம் காட்டினார்.


பதிலுக்கு சீமானும் படு ஆவேசம் காட்டினார். நான் யார் தெரியும்ல.. கேடு கெட்ட ரவுடி. நினைச்சேன்னா வெட்டிப் போட்டுப் போயிட்டேன் இருப்பேன்.. என்று அவரும் தரை லோக்கலில் பேச ஆரம்பித்தார். இப்படி   இரு தரப்பும் தரையிறங்கிப் போய் பேசிக் கொண்டிருந்த நிலையில்தான் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வக்கீல்களோடு வந்த விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரைத் திரும்பப் பெற்றுள்ளார்.


அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது:


போலீஸில் புகார் கொடுத்தது முதல் பிரஸ்ஸை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மெடிக்கல் டெஸ்ட் வரும்போதுதான் நான் வெளியே வர முடிந்தது. 2 வாரமாக சென்னையிலிருந்து தூரத்தில் வைத்திருந்தனர். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் வைத்திருந்தார்கள். சில நாட்களாக அவர் வேறு பாதையில் போகிறார். என்னையும் வேற ரூட்டில் கூட்டிட்டுப் போறாங்க. அதனால்தான் வீடியோ கூட வெளியிட்டேன். கேட்டுட்டுப் பேசுங்கன்னு சொன்னேன். நேத்து நைட்டே வெளியே போகச் சொல்லிட்டாங்க. சாப்பாடு கூட தரலை. போலீஸ்தான் தலையிட்டு தங்க வச்சாங்க. இன்னிக்கு காலையில் கூட சாப்பாடு கொடுத்தாங்க.


நிறைய தொந்தரவுகள், வெளியில் சொல்ல முடியாது. அதனால் வாபஸ் வாங்கிக்கிறேன். பெங்களூர் போறேன். யாரும் கட்டாயப்படுத்தி இதை பண்ணலை . சீமான் சார் கிட்ட பேசினேன். இப்போ வாபஸ் வாங்கிட்டேன். இதைத் தொடரும் எண்ணம் இல்லை. சென்னைக்கு வரும் எண்ணமும் இல்லை. நான் எதிர்பார்த்த அளவுக்கு இது இல்லை. என்னைத்தான் டிகிரேட் பண்ணி அசிங்கப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசினாங்க. பெரிய மனிதர்கள் மீது புகார் கொடுக்கும்போது அதை தாங்கும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். எனக்கு அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவேதான் எதுக்கு தேவையில்லாமல் நம்மை கஷ்டப்படுத்திக்கணும்னுதான் வாபஸ் வாங்கிட்டேன். மேலும் இதைத் தொடரப் போவதில்லை.


காவல்துறை நடவடிக்கை மெதுவாக இருந்தது. 2 சம்மன் அனுப்பினர். அவரோ 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்றார். சீமான் பேசிய விதங்களும் என்னை ஹர்ட் பண்ணுச்சு. நிறைய ஹராஸ்மென்ட் இல்லை. பிசிக்கலி, சாப்பாடு இல்லை. 2 வாரமா ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான் இருந்தேன். போன் இல்லை. பிரஸ்ஸிடம் சொல்ல முடியலை. நான் முதல்வராக இருந்திருந்தால் இதை வேற மாதிரி ஹேன்டில் பண்ணிருப்பேன்.


சீமான் சூப்பர்.. அவருக்குத்தான் தமிழ்நாட்டில் ஃபுல் பவர் இருக்கு. இதை அவரிடமே போய்ச் சொல்லுங்க.. நான் தோல்வியை ஒத்துக்கிட்டுத்தான் போறேன். அவர்தான் சொல்லிட்டாரே 2 லட்சுமியெல்லாம் எனக்கு வேண்டாம்னு. அவர் சொன்னதை நான் பெருசா எடுத்துக்கலை. அவருடன் வாழ்ந்தவதானே நான். அவர் எப்போதும் நல்லாருக்கட்டும். எப்போதும் சக்சஸ்புல்லா இருக்கட்டும் என்றார் விஜயலட்சுமி.