"ரூமுக்கு அழைத்த டாப் ஹீரோ.. கன்னத்தில் அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர்".. அதிர வைத்த விசித்ரா!

Su.tha Arivalagan
Nov 22, 2023,05:10 PM IST

சென்னை: 2001ம் ஆண்டு ஒரு படத்தில் (தமிழ் அல்ல) நடித்தபோது அந்தப் படத்தின் டாப் ஹீரோ என்னை, பலருக்கும் முன்பாகவே ரூமுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் போனதால் என்னை கடுமையாக தொந்தரவு செய்தார்கள் என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார்.


ஸ்டண்ட் காட்சியின்போது ஒரு துணை நடிகர் என்னைத் தொட்டுத் தடவி அநாகரீகமாக நடந்து கொண்டார். அதைப் புகார் செய்தபோது என்னையே கன்னத்தில் அறைந்தார்கள். அத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டேன் என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் நடிகை விசித்ரா.


நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையாக வெடித்து அனல் பரப்பிக் கொண்டுள்ளன. பலரும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து போலீஸாரும் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


விசித்ராவுக்கு டாப் ஹீரோ கொடுத்த கொடுமை




இந்த நிலையில் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்த பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் 2001ம் ஆண்டு நடந்ததாக அவர் கூறியுள்ளார்.


பிக்பாஸ் தமிழ் 7வது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருக்கும் விசித்ரா, தனது கதை குறித்து சக போட்டியாளர்களுக்கு விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:


2001ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. அப்போது மலம்புழாவில் ஷூட்டிங். அங்குதான் எனது வருங்கால கணவரைச் சந்தித்தேன். பாலக்காட்டில் ஹோட்டல் போட்டிருந்தார்கள். அங்குதான் தங்கி ஷூட்டிங் போய் வந்தோம். அப்போதுதான் ஒரு பிரச்சினையைச் சந்தித்தேன். மிகப் பெரிய அளவில் பிரச்சினையைச் சந்தித்தேன். நான் ஏன் கல்யாணத்திற்குப் பிறகு காணாமல் போனேன் என்பதற்கு இந்தப் பிரச்சினைகள்தான் தான் காரணம். இது எனது குடும்பத்தினருக்கும், நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரியும். இது பெரிய பிரச்சினையாக மாறியது. இண்டஸ்ட்ரிக்கே தெரியும். இது எனது மனதில் மாறாத ரணமாக இருக்கிறது. இன்று வரை காயமாக இருக்கிறது.


கேரள ஷூட்டிங்கின்போது அட்டகாசம் செய்த ஹீரோ




டாப் ஹீரோவின் படம் அது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை 3 ஸ்டார் ஹோட்டலாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த ஹோட்டலில் ஜெனரல் மானேஜராக இருந்த எனது வருங்கால கணவர் என்னிடம் வந்து, மேடம் ஹோட்டல் ரினவேஷன் தொடர்பாக பார்ட்டி வைத்துள்ளோம். நீங்கள் வர வேண்டும் என்று அழைத்தார். நானும் போயிருந்தேன். அப்போது பார்ட்டிக்கு வந்திருந்த ஹீரோ, என்னைப் பார்த்து, நீயும் இந்தப் படத்தில் இருக்கியா.. சரி ரூமுக்கு வா என்று கூறி விட்டு நகர்ந்தார். எனக்குப் புரியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. என்ன மாதிரியான பேச்சு இது என்று புரியவில்லை.


எனது ரூமுக்குப் போய் படுத்துத் தூங்கி விட்டேன். அதற்கு அடுத்த நாளிலிருந்து என்னைத் தொந்தரவு  செய்ய ஆரம்பித்தார்கள். நிறைய பிரச்சினை வந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில், ஹோட்டலில் என்று எல்லா இடத்திலும் பிரச்சினை செய்தார்கள். டேக் வராது, ஷாட் வராது.. தமிழில் நான் இப்படி ஒரு போதும் பிரச்சினையைச் சந்தித்தது இல்லை. அது எனது நேரமா அல்லது துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.


தினசரி வந்து எனது அறைக் கதவைத் தட்டுவார்கள்.  ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஹோட்டல் ரிசப்ஷனுக்கு போன் செய்து சொன்னேன். எனது வருங்கால கணவர் வந்து என்னிடம் பரிவுடன் பேசினார். என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்.  நான் பிரச்சினையைக் கூறி எனக்கு வேறு அறை வேண்டும். நான் எந்த அறையில் இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக் கூடாது என்று கேட்டேன். அவரும் உடனே எனக்கு அறையை மாற்றிக் கொடுத்தார். அத்தோடு, ஒவ்வொரு நாளும் ஒரு அறையை மாற்றிக் கொடுத்து உதவினார்.


கலவரத்தின்போது அத்து மீறிய துணை நடிகர்




ஆனால் அவர்கள் ஒரு நாள் எரிச்சலானார்கள். எனக்குப் பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்கள்.அடுத்த நாள் காட்டில் வைத்து ஷூட்டிங். கிராமத்து செட்டப். ஒரு கலவரம் நடப்பது போன்ற காட்சி. அப்போது என்னுடன் இருந்த ஒரு துணை நடிகர் என்னைத்த தகாத முறையில் தொட்டார், தடவினார். முதலில் அதிர்ச்சி அடைந்தேன். தெரியாமல் கை பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். 


ஆனால் திரும்ப டேக் போனபோது 2வது முறையும் அதுபோல செய்தார். 3வது முறையும் அவர் செய்ய முயற்சித்தபோது நான் கையைப் பிடித்து விட்டேன். நேராக இழுத்துக் கொண்டு போய் ஸ்டண்ட் மாஸ்டரிடம் புகார் செய்தேன். ஆனால் ஸ்டண்ட் மாஸ்டரோ, எனது கையை தட்டி விட்டு விட்டு, என்னை ஓங்கி கன்னத்தில் பளார் என அறைந்தார். அத்தனை பேர் முன்பும் இது நடந்தது. ஹீரோ இருந்தார். தயாரிப்பாளர் இருந்தார். எல்லோரும் இருந்தார்கள். ஆனால் யாருமே எனக்காக வரவில்லை. அங்கிருந்து ஒரு நாயும் மதிக்கவில்லை.


பேசாம போம்மா என்று கூறிய சங்கத் தலைவர்




எனக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. உடம்பெல்லாம் சூடாகி விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்படியே அங்கிருந்து வெளியே வந்தேன். எனது பிரண்டிடம் பேசினேன். எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று கூறினேன். அவரும் அங்கிருந்து வந்து விடுமாறு கூறினார். பிறகு எனது யூனியனிடம் பேசினேன். எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்து விட்டு கிளம்பி விடுமாறு கூறினார்கள். நான் வந்து விட்டேன்.


நடிகர் சங்க தலைவரிடம் இதுகுறித்துக் கூறியபோது, பேசாம விட்டுட்டு அடுத்த வேலையைப் பாரும்மா என்று அவர் கூறினார். அது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. செயலாளரோ, சங்கத்துக்கு ஏன் வந்தீங்க. போலீஸுக்குத்தானே நீங்க போயிருக்கணும் என்றார்.  எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.


வாழ்க்கை கொடுத்த கணவர்




எனது வருங்கால கணவர் என்னிடம் வந்து, உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நீங்க வேலை பார்க்கக் கூடாது. விலகிடுங்க. சினிமாவில் நான் பார்த்த விசித்ராவுக்கும், நிஜத்தில் பார்க்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க  விரும்புறேன் என்றார். நான் உடனே சம்மதித்தேன். இது காதல் திருமணம் அல்ல.. எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ஆனால் எனக்கு என் கணவர்தான் ஹீரோ. என்னை கெளரவமாக வாழ வைத்துள்ளார்.  3 குழந்தைகளைக் கொடுத்துள்ளார். 


எனக்கு என்னன்னா.. யாருமே எனக்கு உதவ முன்வரவில்லை. ஒருத்தன் கூட வரலை. அதுதான் வேதனையாக இருந்தது. அதனால்தான் நான் நேசித்த சினிமாவை விட்டு விலகினேன் என்று கண்ணீர் மல்கக் கூறினார் விசித்ரா.


யார் அந்த ஹீரோ?



விசித்ராவின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்தது தெலுங்குப் படம் என்றும், தெலுங்கில் இப்பவும் முன்னணியில் இருக்கும் ஒரு ஹீரோதான், விசித்ராவை இந்த அளவுக்கு தொந்தரவு செய்தவர் என்றும் சொல்கிறார்கள்.


அந்த முக்கியமான ஹீரோ ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயர் போனவர். இன்று வரை விடாப்பிடியாக ஸ்டண்ட் காட்சிகளில் அதகளம் செய்து வருபவரும் கூட. "டான்ஸுக்கும்" பெயர் போனவர். இவர்தான் விசித்ராவிடம் அத்துமீறி அடாவடித்தனம் செய்தவர் என்று பலரும் சமூக வலைதளங்களில் திட்டிக் கொண்டுள்ளனர். விசித்ரா, பகிரங்கமாக அந்த நடிகரின் பெயரைக் கூற வேண்டும் என்றும் பலரும் கோரி வருகின்றனர்.