"கீழ்த்தரம்".. சேலம் ஏ.வி. ராஜு மீது திரிஷா ஆவேசம்.. சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிப்பு!

Su.tha Arivalagan
Feb 20, 2024,07:28 PM IST

சென்னை:  கீழ்த்தரமானவர்களின் செயல்கள் தொடர்வதைக் கண்டு மிகவும் அறுவெறுப்பாக இருக்கிறது. தரம் கெட்ட முறையில் பேசியவர்கள் மீது எனது சட்டக் குழு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சேலம் ஏவி ராஜுவுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்பு அதிமுக உடைந்தது. ஓ.பன்னீர் செல்வம் தனியாக வெளியேறினார். மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி முன்பு மெளன விரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் எம்எல்ஏக்களைத் தக்க வைப்பதற்காக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் கொண்டு போய் தனது ஆதரவு எம்எல்ஏக்களைத் தங்க வைத்திருந்தார் சசிகலா.


அந்த கூவத்தூரில்தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு தான் சிறைக்குப் போனார் சசிகலா. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி. ராஜுவுக்கும் இடையே மோதல் ஏற்படவே அவரை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.




இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.வி. ராஜு, கூவத்தூரில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களிடம் பரபரப்பாக பேசினார். அப்போது நடிகை திரிஷா குறித்து அவர் தெரிவித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் சேலம் ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக திரிஷா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  கீழ்த்தரமானவர்களின் செயல்கள் தொடர்வதைப் பார்க்கவே அறுவெறுப்பாக உள்ளது. தங்களது சுய நலனுக்காக எவவளவு கேடு கெட்ட நிலைக்கும் இறங்கத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். தேவையான கடும் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். அதற்குத் தேவையானதை எனது வழக்கறிஞர்கள் குழு உடனடியாக தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் திரிஷா.