நமீதாவிடம் கேள்வி கேட்ட விவகாரம்.. நடந்தது இதுதான்.. அறநிலைத்துறை ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

Meenakshi
Aug 27, 2024,06:50 PM IST

மதுரை: ஜாதி, மதம் தொடர்பாக நமீதாவிடம் எந்த விதமான கேள்வியும் நேரடியாக கேட்கவில்லை. நமீதாவை அழைத்து வந்த நபரிடம்தான், நமீதா இந்து மதத்தை பின்பற்றுபவரா என்று மட்டுமே கேட்கப்பட்டது என்று அறநிலைத்துறை ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.


நடிகை நமீதா கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது கணவருடன் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கோவில் அதிகாரி ஒருவர் தன்னிடம் நீங்கள் எந்த மதம் என்றும், அதற்கு ஆதாரம் கேட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வைரலாகியது. இது குறித்து நமீதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிற்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இதற்கு,மீனாட்சி அம்மன் கோயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில், பிரபலங்கள் கோவிலுக்கு வரும்போது, சந்தேகம் இருந்தால் கோயில் பணியாளர்கள், அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு. அந்த வகையில், பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி நடிகை நமீதாவிடம் கேட்டு உள்ளார். இது வழக்கமான நடைமுறையே என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில், இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமீதாவின் மனம் புண்படும் படியோ, சட்டத்திற்கு புறம்பாகவோ ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நமீதா வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் வருத்தப்படுவதாக இருந்தால் அதற்காக நாங்கள் எங்களின் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ஜாதி,மதம் தொடர்பாக நமீதாவிடம் எந்த விதமான  கேள்வியும் நேரடியாக கேட்கவில்லை. நமீதாவை அழைத்து வந்த நபரிடம் இந்து மதத்தை பின்பற்றுபவரா என்று தான் கேட்கப்பட்டது. காலசந்தி பூஜைக்குப் பின் நமீதா, அவரது கணவர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, பின் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.