நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. கருமுட்டையை பாதுகாக்கப் போறேன்.. மிருனாள் தாக்கூர் அதிரடி

Su.tha Arivalagan
Apr 28, 2024,01:04 PM IST

உறவுகள் இப்போதெல்லாம் கடினமாகி விட்டன. நம்மைப் புரிந்து கொள்ளும் துணை கிடைப்பது சிரமமாக உள்ளது. நான் எனது கரு முட்டைகளை உறைய வைத்து பாதுகாக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார நடிகை மிருனாள் தாக்கூர்.


இந்தியாவில் இந்த நிமிடத்தில் யார் பெஸ்ட் நடிகை என்றால் விரல் விட்டுச் சொல்லும் சில நடிகைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் மிருனாள் தாக்கூர். இவர் நடித்த எல்லாப் படங்களுமே ஹிட்டடித்துள்ளன. சினிமாவாக இருந்தாலும் சரி, ஓடிடியாக இருந்தாலும் சரி பெஸ்ட்டாக கொடுத்து ரசிகர்களை வாரிக் குவித்து வைத்திருக்கிறார் மிருனாள் தாக்கூர். 


சீதாராமம், டூபான், பட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் 2,  தி பேமிலி ஸ்டார் என இவரது கலக்கல் படங்களின் லிஸ்ட் பெரியது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் இந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வாழ்க்கை, உறவுகள், காதல், திருமணம் குறித்து தத்துவார்த்தமாக பேசியுள்ளார் மிருனாள் தாக்கூர்.




இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


வாழ்க்கையிலும் சரி , தொழிலிலும் சரி சம நிலையை கடைப்பிடிக்க வேண்டியது  முக்கியமாகும்.  இதை சரியாக கடைப்பிடிக்க கிட்டத்தட்ட எல்லோருமே போராடிக் கொண்டிருக்கிறோம். உறவுகள் இன்றெல்லாம் மிகவும் கடினமாகி விட்டது. சரியான பார்ட்னரைக் கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. அவர் நம்மைப் புரிந்து கொள்ள வேண்டும், நம்ம வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவும் இருக்கிறது.


நிறையப் பேர் இன்று கருமுட்டையை உறைய வைத்து பாதுகாக்கிறார்கள். நானும் கூட அப்படிச் செய்யலாம் என்று இருக்கிறேன்.  நான் எனது வேலையை முடித்ததும் வீட்டுக்குப் போனதுமே தெரப்பி செய்ய ஆரம்பித்து விடுவேன். நாம் இன்று பார்க்கும் வேலைக்கு அது தேவைப்படுகிறது. வீட்டில் என்னை மகிழ்விக்க பலர் காத்திருக்கிறார்கள். எனது சகோதரி, எனது பூனை.. எனது நண்பர்கள்.. இத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் எனது வாழ்க்கையை எளிதாக்குபவர்கள் என்றார் மிருனாள் தாக்கூர்.


மிருனாள் தாக்கூர் நடித்துள்ள  பேமிலி ஸ்டார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். அதற்கு முன்பு நானியுடன் இணைந்து ஹாய் நன்னா படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.