என்னாச்சு நமக்கு.. ஏன் இந்த ஆண்கள் இப்படி வெறி பிடித்து பேயாய் அலைகிறார்கள்?.. குஷ்பு ஆவேசம்
சென்னை: நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 3 பேர், 3 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது மிகக் கொடுமையானது. ஏன் இந்த ஆண்கள் இப்படி கொடூரமான பேய்களாக மாறி விட்டார்கள் என்று வேதனையாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் அக்கிரச் செயல்கள் வரிசையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, அதிகரித்து வருகின்றன. மிகக் கொடூரமான நிர்பயா பாலியல் அக்கிரமத்திற்குப் பிறகு நாட்டையே உலுக்கிய சம்பவமாக கொல்கத்தா இளம் பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் பலாத்கார கொலை வந்து சேர்ந்துள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு வெடிக்கிறது.
பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்னென்னவோ தண்டனை கொடுத்தும் கூட, சில மாநிலங்களில் என்கவுண்டரில் அவர்களை போலீஸார் போட்டுத் தள்ளியும் கூட இதுபோன்ற குற்றவாளிகள் அடங்க மாட்டேன் என்று வெறி பிடித்தாற் போல தொடர்ந்து செயல்படுவது வியப்பளிக்கிறது. இன்னும் கொடூரமான தண்டனைகளைக் கொண்டு வர வேண்டுமோ என்றுதான் எல்லோரையும் இது யோசிக்க வைக்கிறது.
இந்த நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக நடிகை குஷ்பு ஆவேசமாக ஒரு பதிவைப் போட்டுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவு:
இந்தியாவில் 7 நாட்களில் 7 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. மிகக் கொடுமையாக இருக்கிறது. இதில் 3 பேர், 3 முதல் 14 வயதேயான சிறுமிகள் ஆவர். 2 பேர் இதில் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாம் எங்கே போகிறோம்.. எந்த இடத்தில் நாம் சறுக்குகிறோம்.. ஏன் இந்த ஆண்கள் எல்லாம் இப்படி பேயாய் அலைகிறார்கள். இந்த குற்றத்தை செய்யும் ஆண்களின் மண்டையை உடைத்து, அப்படி என்னதான் அவர்களது மனதில் ஓடுகிறது என்று அறிய ஆசைப்படுகிறேன். இப்படிப்பட்ட அக்கிரமத்தை செய்யத் துணியும் அவர்களது மனதில் ஏன் இப்படி ஒரு வெறித்தனம் ஒடுகிறது. எப்படி இந்த துணிச்சல் அவர்களுக்கு வருகிறது. அவர்களது பெற்றோர் இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்த்ததில் எங்கு தோல்வி அடைந்தார்கள்?
இப்படிப்பட்ட ஆண்கள் மிகவும் பலவீனமானவர்கள். அவர்களுக்குப் பெண்களைப் பார்த்தால் பயம், அவர்களது வளர்ச்சி, அவர்களது புத்திசாலித்தனம், அவர்களது திறமை, அவர்களது தலைமைத்துவ குணாதிசயங்களைப் பார்த்தால் பயம். அவர்களது வெற்றியைப் பார்த்துப் பயம், இப்படிப்பட்ட மிருகங்கள், பெண்களை வெல்ல எடுக்கும் ஆயுதம் பலாத்காரம்தான். பெண்களை கெடுத்து சீரழித்து அவர்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினால் வென்று விட்டதாக நினைக்கிறார்கள்.
இது நிறுத்தப்பட வேண்டும். போதும். இதற்கு மேலும் இதை அனுமதிக்க முடியாது. ஒரு பாலியல் பலாத்கார கைதி சிறையில் அடைக்கப்பட்டு 3 வேளையும் சாப்பிட்டுக் கொண்டு, நன்றாக தூங்கிக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தை தின்று கொழுத்து வரும் செயல்களை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. நமக்கு நீதி தேவை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை தவறாகப யன்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட ஈனச் செயல்களுக்கு குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது நீதியரசர்கள் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கைக்கு வழி வகுப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரையுமே பெற்றது ஒரு பெண்தான். அப்படிப்பட்ட பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற மோசமான குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது.
கணவில் கூட ஒரு பெண்ணைத் தொடுவதை இப்படிப்பட்ட ஆண்கள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது. பெண்ணை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆண் அவளைப் பற்றி நினைக்கவே கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த அவமரியாதைக்கு , இழி செயலுக்கு எதிராக போராட வேண்டும். ஒரு பெண்ணுக்காக அனைவரும் இணைவோம். அவர் தாயாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி, சகோதரியாக இருந்தாலும் சரி, நமக்கு தொடர்புடையவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் சுயமரியாதைக்காக அனைவரும் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார் குஷ்பு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்