ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

Su.tha Arivalagan
Nov 21, 2024,06:22 PM IST

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இன்று அவர் புழல் மகளிர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


சென்னையில் நடந்த பிராமணர்கள் அமைப்பின் போராட்டத்தில் கலந்து கொண்டு கஸ்தூரி பேசும்போது சர்ச்சைக்கிடமான கருத்துக்களைக் கூறியதாக அவர் மீது பல்வேறு ஊர்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவருக்கு முன்ஜாமினும் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் ஹைதராபாத்தில் தங்கியிருந்த கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 




சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தயாளன், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி தினசரி காலை 10 மணிக்கு அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.


இதையடுத்து ஜாமின் தொடர்பான ஆவணங்களை கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர் இன்று சென்னை புழல் மகளிர் சிறையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து கஸ்தூரி விடுவிக்கப்பட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்