Kanguva.. கங்குவா குறித்து இப்படியா நெகட்டிவிட்டி பரப்புவது.. நடிகை ஜோதிகா ஆவேசம்
சென்னை: கங்குவா படம் குறித்து நெகட்டிவான விமர்சனம் பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே, கும்பலாக நெகட்டிவிட்டியை திட்டமிட்டு பரப்பியுள்ளனர் என்றும் அவர் குமுறியுள்ளார்.
சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான படம்தான் கங்குவா. இப்படம் குறித்து தொடர்ந்து நெகட்டிவான விமர்சனங்கள் பெரிய அளவில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. படம் முழுக்க இரைச்சலாக இருப்பதாக பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் சத்தத்தை குறைக்குமாறு தியேட்டர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் கங்குவா குறித்து திட்டமிட்டு நெகட்டிவிட்டி பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை:
நடிகர் சூர்யாவின் மனைவியாக இல்லாமல், ஒரு நடிகையாக, ஒரு சினிமா விரும்பியாக, ஜோதிகாவாக இதை எழுதுகிறேன்.
உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் சூர்யா. ஒரு நடிகராக, சினிமாவை மிகப் பெரிய பாய்ச்சலுக்குக் கொண்டு போகத் துணிந்த உங்களது முயற்சியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
முதல் அரை மணி நேரம் சரியில்லை
முதல் பாதி கண்டிப்பாக சத்தம் அதிகமாக இருந்தது உண்மைதான். அது சரியாக இல்லை என்பதும் உண்மைதான். பெரும்பாலான இந்தியப் படங்களில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இயல்புதான். மேலும் இப்படிப்பட்ட சோதனை ரீதியிலான படத்தில் இதுபோன்ற சூழல் வருவதும் இயல்புதான். ஆனால் மொத்த நேரமான 3 மணி நேரத்தில் அரை மணி நேரம்தான் இந்தப் பிரச்சினை. உண்மையில் மிகப் பெரிய சினிமா அனுபவமாக கங்குவா உள்ளது என்பதுதான் உண்மை. ஒளிப்பதிவு இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில், பிரமாதமாக உள்ளது. வெற்றி பழனிச்சாமிக்குப் பாராட்டுகள்.
மீடியாக்களிலும், சில சினிமாப் பிரபலங்களும் இந்தப் படம் குறித்து எதிர்மறையாக விமர்சனம் செய்வது கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். இதுபோன்ற விமர்சனங்களை பெரும்பாலான முட்டாள்தனமான, பெரிய பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் செய்யவில்லை. பெண்களை கேவலப்படுத்தும், அவமரியாதை செய்யும் காலம் காலமாக சொல்லப்படும் அதை கதைகளுடான, இரட்டை அர்த்தம் வசனங்கள் கொண்ட, படங்களுக்குக் கூட இப்படிப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் செய்யப்படவில்லை.
நிறைய பாசிட்டிவான விஷயங்கள்
கங்குவா படத்தில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன. 2வது பாதியில் வரும் பெண்ணின் சண்டைக் காட்சி, இளைஞனின் காதல், கங்குவாவுக்கு நடந்த துரோகம். படத்தை விமர்சிக்கும்போது நல்ல விஷயங்களையெல்லாம் மறந்து விட்டார்கள். முதல் நாளிலேயே கங்குவா குறித்து இந்த அளவுக்கு நெகட்டிவான விமர்சனத்தை பரப்பியது பெரும் சோகமானது.
முதல் ஷோ முடிவதற்கு முன்பே இதைச் செய்துள்ளனர். ஒரு கும்பலாக இதைச் செய்தது கண் கூடாகவே தெரிந்தது. இந்தப் படத்தின் கதைக்காகவும், அதன் படமாக்கத்திற்காகவும் உண்மையில் பாராட்ட வேண்டும். மிகப் பெரிய விஷூவல் டிரீட்டாக இதைக் கொண்டு வந்துள்ளனர். 3டியில் இதை உருவாக்க மிகப் பெரிய அளவில் முயற்சித்துள்ளனர்.
கங்குவா டீம், நீங்கள் கொடுத்துள்ள இந்தப் படத்துக்காக பெருமையாக உணருங்கள். நெகட்டிவாக பேசுவோர் அதைத்தான் பேச முடியும். அதை விடுத்து, சினிமாவை உயர்த்த அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் ஜோதிகா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்