"சி. அழகப்பன் ஏமாற்றி விட்டார்.. பாஜக உதவலை".. கட்சியை விட்டு விலகினார் கெளதமி!
சென்னை: என்னை சி. அழகப்பன் ஏமாற்றி விட்டார். எனது பணம், சொத்து எல்லாவற்றையும் அபகரித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக எனக்கு உதவவில்லை. வருத்தத்துடன், வலியுடன் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று நடிகை கெளதமி கூறியுள்ளார்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவரான கெளதமி தடிமல்லா, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் ஏராளமான படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆவார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராமராஜன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவரான கெளதமி பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்தும் சில காலம் வாழ்ந்தார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் திடீரென பாஜகவில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் கெளதமி. ராஜபாளையம் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் அப்செட் ஆன கெளதமி அதன் பின்னர் பெரிய அளவில் கட்சியில் ஈடுபாடு காட்டாமல்தான் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது கட்சியை விட்டு அவர் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நீண்டதொரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதம்:
கனத்த இதயத்துடனும், ஏமாற்றத்துடனும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் இணைந்தேன். நாட்டை வளப்படுத்துவதில் என்னால் ஆன அனைத்துப் பங்களிப்பையும் செய்துள்ளேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் வந்தபோதும் கூட நான் எனது கடமையிலிருந்து பின்வாங்கியதில்லை. இப்போது நான் எனது வாழ்க்கையில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிலான நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறேன். எனக்கு கட்சியில் எந்தத் தலைவரும் இப்போது துணையாக இல்லை என்பதை விட, என்னுடைய இந்த நிலைக்கு யார் காரணமோ, யார் எனக்குத் துரோகம் செய்தாரோ அவருக்குத் துணையாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய வேதனையாக உள்ளது.
எனது பணம், சொத்துக்கள், சொத்து ஆவணங்கள் என எல்லாவற்றையும் சுரண்டி விட்டார் சி. அழகப்பன். 20 வருடங்களுக்கு முன்பு என்னை அணுகினார் அழகப்பன். எனது தனிமை, எனது நிலைமை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அவரும் அவரது குடும்பமும் எனது வாழ்க்கைக்குள் நுழைந்தனர். குடும்பத்தில் ஒரு மூத்தவர் போல தன்னை காட்டிக் கொண்டு என் மீது அக்கறை கொண்டவராக நடித்து எனது வாழ்க்கையில் புகுந்தார். அவரை முழுமையாக நம்பினேன். எனது ஏராளமான நிலங்கள், சொத்துக்களை விற்பனை செய்யும் பொறுப்பை அவரை நம்பி கொடுத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் என்னை மோசடி செய்து விட்டார் என்று. என்னையும் எனது மகளையும் தனது குடும்பத்தில் ஒரு அங்கமாக பார்ப்பதாக கூறிக் கொண்டே என்னையும், எனது மகளையும் நடு ரோட்டில் நிறுத்தி விட்டார்.
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஈட்டிய பணத்தையும், சொத்துக்களையும் மீட்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கினேன். ஒரு பொறுப்பான இந்திய குடிமகளாக முறைப்படி போலீஸில் புகார் கொடுத்தேன். முதல்வர், காவல்துறை, நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து புகார்களை அளித்தேன். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை. இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
2021 சட்டசபைத் தேர்தலின்போது ராஜபாளையம் தொகுதியை வளர்க்கும் பொறுப்பை எனக்கு கட்சி அளித்தது. மேலும் அங்கு போட்டியிடும் வாய்ப்பும் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. நானும் ராஜபாளையம் மக்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றினேன். கட்சியை அடி மட்ட அளவில் பலப்படுத்தினேன். ஆனாலும் கடைசி நேரத்தில் எனக்கு சீட் மறுக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்சிக்காக உழைத்தேன். இருப்பினும்,25 வருடமாக கட்சிக்காக அயராமல் பாடுபட்டு வரும் எனக்கு ஆதரவாக கட்சித் தலைவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது என்னை அதிர வைத்துள்ளது. வலியைக் கொடுத்துள்ளது. அதேசமயம், பல மூத்த தலைவர்கள் அழகப்பனுடன் கை கோர்த்து நிற்கின்றனர். அவர் மீது பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் ஆதரவுடன் கடந்த 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை கட்சித் தலைவர்கள் பலர் ஆதரிக்கின்றனர். எனக்கு இன்னும் முதல்வர், காவல்துறை, நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக நான் கேட்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு சிங்கிள் மதராக, ஒரு பெண்ணாக, நானும், எனது மகளும் தொடர்ந்து போராடுவோம். மிகுந்த வலியுடன் கட்சியை விட்டு நான் விலகுகிறேன் என்று கூறியுள்ளார் கெளதமி.