பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் .. எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில்.. அதிமுகவில் இணைந்தார்
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார். சார்லி சாப்ளின், மனசெல்லாம் நீயே, ஸ்டைல், விசில், வானம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரைப்பட நடன இயக்குனராக சிறிது காலம் செயல்பட்டார். அதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார்.
சிறிது காலத்திற்கு பின்னர், இவருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 2022 நவம்பர் மாதத்தில் பா.ஜ.க.வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார். பின்னர் இணைய பக்கங்களில் அண்ணாமலையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார் காயத்ரி ரகுராம்.
அவர் திமுக அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்தநிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து, அதிமுக வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை இன்று 19.1.2024 சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், மறைந்த திரைப்பட இயக்குனர் சுப்பிரமணியம் அவர்களின் பேத்தியும் மறைந்த நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் அவர்களது புதல்வியுமான செல்வி காயத்ரி ரகுராம் அவர்கள் இன்று கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் என்று கூறப்பட்டுள்ளது.