நடிகர் தனுஷிற்கு எதிராக தீர்மானம்.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு.. நடிகர் சங்கம் கண்டனம்
சென்னை: சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் நடிகர் தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இகுறித்து விவாதிக்க அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர்களின் சம்பளம் குறைப்பு , திரைப்படங்களின் தயாரிப்பு செலவை குறைப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் நிலையில் இனி வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. அப்போது சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் பல தீர்மானங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எடுக்கப்பட உள்ளதாம்.