14 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஷூட்டிங்குக்காக.. திருவனந்தபுரம் செல்கிறார் விஜய்.. குதூகலிக்கும் கேரளா!

Meenakshi
Mar 14, 2024,03:58 PM IST

திருவனந்தபுரம்: தி கோட் படத்தின் கிளைமேக்ஸ்சிற்காக கேரளா செல்கிறார் நடிகர் விஜய். 14 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் கேரளா செல்கிறார். இந்த செய்தி கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்களாம்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தி கோட் படத்தின் வேலைகளில் தற்போது விஜய் பிசியாகியுள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இதற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வர உள்ளதால் அடுத்து முழு நேரம் அரசியலில் செயல்பட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். 


இந்த படத்திற்கு விஜயதசமி அன்று பூஜை போடப்பட்டது.  இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.




தற்போது விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரு பாடலில் மட்டும் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட உள்ளது. அதற்காக விஜய் வருகின்ற மார்ச் 18ம் தேதி திருவனந்தபுரம் செல்கிறார் என்ற தகவல் தற்போது பரவி வருகிறது. 


கடைசியாக காவலன் படத்திற்காகத்தான் கேரளா போயிருந்தார் விஜய். அதன் பிறகு அவரது படங்களின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெறவில்லை. இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா செல்கிறார் நடிகர் விஜய். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய் நடிக்கும் காட்சிகள்  இரவு நேரங்களில்  நடத்தப்படும் என்று தெரிகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு திருவனந்தபுரத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் விஜய். தமிழ்நாட்டை போல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால், இச்செய்தியால் கேரள ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.