ஓட்டு போடுவது ஜனநாயக கடமை.. நடிகர் விஜய் சேதுபதி.. அதைப் பத்தி என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
சென்னை: நாம் ஓட்டு போடுவது என்பது இன்றைக்கு மட்டும் என்பது இல்லாமல், நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப் போகிற எதிர்காலத்தை பற்றியது என்பதை சிந்தித்து உங்களுக்கு சரி என்று படுகிறவர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்க இடம் கொடுங்கள். மறந்து விடாதீர்கள். ஓட்டுப் போடுங்கள் என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஒருபுறம் தமிழக அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு இடையூறு அளிக்காத வகையில் தேர்தல் பணிகளை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான பல்வேறு திட்டங்களை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து வருகிறது.
இந்த நிலையில் ஓட்டு போடுவது என்பது நமது ஜனநாயக கடமை. நமது உரிமை என்பதன் அடிப்படையில் நடிகர் விஜய் சேதுபதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே.. நீங்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்த தேர்தல் வந்துவிட்டது. பொதுவாக தேர்தல் வந்தால் நம் மனநிலையில் நம் நினைவுக்கு வருவது, யார் வந்தால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடலாம், இல்லையென்றால் இந்த ஓட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற உணர்வு ஏற்படும். இந்த மனநிலை எல்லாம் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு, நாம் நமக்காக இல்லை என்றாலும் நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அடுத்த தலைமுறைகளின் எதிர்காலத்திற்கும், நிச்சயம் ஓட்டு போடணும்.
காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசு வித்து ஓட்டு வாங்குவது எவ்வளவு பெரிய துரோகமோ.. அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க, யாராக இருந்தாலும் சரி அவர்களைப் பற்றி விசாரித்து, அவர்களால் நமக்கு என்ன பயன் என்பதை விட நமது நாட்டுக்கு என்ன பயன் என்பதை யோசித்துப் பாருங்கள். அதுல நம்முடைய சுயநலமும் இருக்கு.
நாம எல்லோரும் சேர்ந்ததுதானே நாடு. நாம என்பது இன்றைக்கு மட்டும் பார்க்கிறதா.. அல்லது நாளைக்கு நமது குழந்தைகள் வாழப் போற எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறதா.. அதனால நம்ம குழந்தைகள் எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மளை ஆளப்போவது யாரு.. அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.. யாரிடம் ஆட்சியை கொடுப்பது .. அவங்க இதுக்கு முன்னாடி என்ன செஞ்சிருக்காங்க.. அப்படிங்கிறத அலசி ஆராய்ந்து ஓட்டு போடுவோம்.
இதுவரை அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகளை பார்க்கவில்லை என்றாலும் சரி, பேசவில்லை என்றாலும் சரி, இனிமேலாவது தேர்தல் நடைபெறும் நாள் வரை தினமும் அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகளை பாருங்க. அதைப்பற்றி பேசுங்க. அந்த செய்தியை பகிர்ந்து அதைப் பற்றி விவாதிங்க. ஓட்டு போடும் நாள் அன்று தெளிவாக யோசித்து, சிந்தித்து உங்களுக்கு சரி என்று படுகிறவர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்க இடம் கொடுங்கள்.மறந்து விடாதீர்கள். மறந்து இருந்து விடாதீர்கள். ஓட்டு போடுங்க என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.