உலக பட்டினி தினம்: தமிழ்நாடு முழுவதும் அசத்திய விஜய் ரசிகர்கள்.. மாபெரும் அன்னதானம்!
சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இந்த அன்னதான திட்டத்தை கட்சி விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என தவெக தலைவர் விஜய் அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்படி அன்னதானம் செய்தது இல்லை. ஆனால் முதல் முறையாக விஜய் கட்சியினர் இதைச் செய்து மக்களின் அன்பைப் பெற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ராஜாவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் விஜய்யின் கடைசி படமாகும். இந்த இரண்டு படங்களிலும் விஜய் நடித்து முடித்த பின்னர் முழுமையாக அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறாார்.
விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி விஜய் நற்பணி மன்றத்தை மாற்றி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டது. அப்போது வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கட்சி உட்கட்டமைப்பு பணிகளை தீவிர மேற்கொண்டு வந்தனர். இக்கட்சி சார்பாக பள்ளி மாணவர்கள் உட்பட பலருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய்.
இந்த நிலையில், மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை விஜய் கட்சியினர் சரியாக பயன்படுத்தியுள்ளனர். தவெக தலைவர் விஜயின் உத்தரவுப்படி, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டசபை தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இன்று உலக பட்டினி தினம் தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலக பட்டினி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க வேண்டும். இதன் மூலம் பட்டினில்லா உலகத்தை உருவாக்க முடியும். இந்த மக்கள் நலப் பணிகளில் கட்சி விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர். மக்களிடையே இந்த அன்னதானம் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்பதோடு, விஜய் கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னதானத்திற்குப் பெயர் போனவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். தற்போது அந்த வரிசையில் விஜய்யும் இணையவிருப்பதாக தெரிகிறது.
விரைவில், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார் நடிகர் விஜய் என்பது நினைவிருக்கலாம்.