நடிகர் மனோஜ் வீட்டுக்கு.. நடந்தே சென்று.. இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

Manjula Devi
Mar 26, 2025,08:32 PM IST

சென்னை: மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில்  சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு அப்பா பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதனைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, சமுத்திரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து வந்த மனோஜ், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஈஸ்வரன், விருமன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவரின் இறப்பு செய்தி கேட்டு திரை உலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மறைவிற்கு திரையுலகினரும், பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


மனோஜின் உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு நடிகர்கள் கார்த்தி, பிரபு, சரத்குமார், சிவக்குமார், சூர்யா, வைரமுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 




அந்த வகையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்  மனோஜ் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து, இறுதி மரியாதை செலுத்தினார். விஜயின் நீலாங்கரை வீட்டிற்கு அருகில் தான் பாரதிராஜாவின் வீடு அமைந்திருப்பதால் நடந்தே சென்று மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.



தொடர்ந்து மறைந்த நடிகர் மனோஜ் உடல் வைக்கப்பட்டுள்ள நீலாங்கரை வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த பல்வேறு நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.