பிப். 4ம்தேதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லி பயணம்... எதுக்கு தெரியுமா?

Meenakshi
Jan 26, 2024,06:13 PM IST

சென்னை: பிப்., 4ம் தேதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதற்காக இந்த பயணம் மேற்கொள்ள உள்ளார்களாம்.


நடிகர் விஜய் 2009ம் ஆண்டு நற்பணி மற்றும் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார்.அதன் பிறகு பெரிய அளவில் எதும் செய்யாமல் இருந்த நடிகர் விஜய், சமீபகாலமாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை அந்த இயக்கத்தின் மூலமாக செய்து வந்தார். 


மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், கட்சி நிர்வாகிகளை வைத்து அன்னதானம் அளித்தல், நூலகம் அமைத்தல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமீபகாலமாக செய்து வந்தார்.




இந்நிலையில்,நேற்று திடீர் என சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய், ஆலோசனை நடத்தினார். வருகிற தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததாக  நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார். சுமார் 2மணி நேரங்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.


இந்த ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தை முதலில் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதலில் கட்சி பெயரை பதிவு செய்து விட்டு அதன் பின்னர், ஒரு மாத காலத்திற்குள் கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.


அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு குழு  பிப் 4ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழுவினர் கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவுள்ளனர். அதன்பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் விஜய் மக்கள் இயக்கம் இறங்கும் என்று தெரிகிறது. எது எப்படியோ நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை வெகு விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் என்றும் ரசிகள் மத்தியில் பரபரப்பாக பேச்சு கிளம்பியுள்ளது.