பொன்‌ ஒன்று கண்டேன்..நேரடியாக டிவியில் ஒளிபரப்புவது வேதனை.. அதெல்லாம் தப்புங்க..வசந்த் ரவி புலம்பல்!

Manjula Devi
Mar 15, 2024,04:14 PM IST

சென்னை: பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற செய்தியை சமூக வலைத்தளத்தின் மூலம் அறிந்து ஒட்டுமொத்த படகுழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என கூறி, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜியோ ஸ்டுடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அப்படத்தின் ஹீரோவான, நடிகர் வசந்த் ரவி.


நடிகர் வசந்த் ரவி பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இப்படத்தின் மூலம் பலரது பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜியோ ஸ்டுடியோ மற்றும் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில்,  பொன்னொன்று கண்டேன் திரைப்படம் உருவாகியுள்ளது. கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா  இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் நடிகர்கள் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.




இந்த நிலையில் பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வரும் மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற ப்ரோமோ அறிவிப்பு சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்து  படக்குழுவினர் மற்றும் நடிகர் வசந்த் ரவி  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதற்காக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறியுள்ளதாவது:


அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மைதானா? ஜியோ ஸ்டுடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.


இந்த படத்திற்காக கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு குறித்து எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ ஸ்டுடியோஸ்.


ஒரு நடிகனுக்கோ அல்லது கலைஞனுக்கோ வணிக ரீதியான தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுகளில் தலையிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல என கூறியுள்ளார்.