மழை நீர் வடிகால்களில் குப்பை போடாதீங்க.. அடச்சிக்கிட்டு எல்லாருக்கும் கஷ்டம்.. நடிகர் எஸ்.வி. சேகர்

Su.tha Arivalagan
Oct 15, 2024,01:34 PM IST

சென்னை:   மழைக்காலங்களில் நாம் படும் மிகப் பெரிய கஷ்டம் எது என்றால் மழை நீர் வடிகால் உள்ளிட்ட கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகள்தான். இந்த அடைப்புகளுக்குப் பெரும்பாலும் முக்கியக் காரணமாக அமைவது நாம் போடும் குப்பைகள்தான். அதுகுறித்த விழிப்புணர்வு மெசேஜ் ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


மழைக்காலம் வந்து விட்டாலே மழை நீர் தேங்குவதும், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் போக வழியில்லாமல் போவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நாம் என்ன செய்கிறோம். வீட்டுக் குப்பைகளை தூக்கி அப்படியே வெளியே வீசுகிறோம். பலர் கால்வாய்களில் குப்பைகளைப் போடுவதை ஒரு கொள்கை போலவே வைத்துள்ளனர். அது சாக்கடைதானே.. அதில் போட்டால் என்ன தப்பு என்பது அவர்களின் வாதமாக இருக்கும்.




இப்படி காலி மனைகளில் போடும் குப்பைகள், கால்வாய்களில் போடும் குப்பைகள், மழை நீர் வடிகால் கால்வாய்களில் போடப்படும் குப்பைகள் எல்லாம் சேரும்போது மழை நீர் சரியாக போகும் வழியில்லாமல் சிக்கிக் கொள்கிறது. அதை எடுக்க தூய்மைப் பணியாளர்கள் கடும் சிரமப்படுகின்றனர். கன மழைக்காலங்களில் அவர்கள் படும் பாடு மிகக் கொடுமையானது.


நமது பகுதி நன்றாக இருக்க வேண்டும், தண்ணீர் சரியாக போக வேண்டும் என்பதற்காக அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர். இதையெல்லாம் மனதில் வைத்து நாம் குப்பைகளை, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.


இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், மழை நீர் வடிகால் வசதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைப் போட்டு விடுகிறோம். அதனால்தான் பிளாக் ஆகி விடுகிறது. நம்ம வீட்டுக் குப்பையெல்லாம் வீட்டை விட்டுப் போனால் நல்லது என்று நாம் நினைக்கிறோம். அது என்னாகுது, அடைத்துக் கொள்கிறது. நான்  எம்எல்ஏவாக இருந்தபோது ஜெட் லாடிங் மிஷின் வாங்கிக் கொடுத்தேன். கழிவு நீர் கால்வாய்களில் மனிதர்கள் இறங்காமல் மெஷின் மூலமாக குப்பைகளை, கழிவுகளை அகற்றக் கூடிய திட்டம் இது. ரூ. 90 லட்சத்தில் 2 வெஷின் வாங்கிக் கொடுத்தேன். எல்லோரும் வாங்கித் தர்றாங்க.


இதுபோன்ற இயற்கைப் பேரிடர் காலத்தில், இந்த சூழலில் நாமும் தற்காத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருங்க. அனைவரும் பத்திரமாக இருங்க என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்