திமுதிமுவென திரண்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.. பரபரத்த கூட்டம்.. விஜய் பாணியில் திட்டமா?

Manjula Devi
Mar 13, 2024,04:12 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளாராம். எதற்காக இந்த சந்திப்பு.. சிவகார்த்திகேயனும் அரசியலில் குதிக்கப் போகிறாரா.. என்ற  எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.


நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக, நகைசுவையாளராக, தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 


இதனைத் தொடர்ந்து தனது நடிப்பின் திறமையால் மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், அயலான்,உள்ளிட்ட பல்வேறு  சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோகளில் ஒருவராக டஃப் கொடுத்து வருகிறார்.




தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழக வீரர் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டப் பணியை நெருங்கி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதுப் படத்தில் கமிட் ஆகி, இப்படத்திலும் நடித்து வருகிறார்.


கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இதன் பின்னர் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கியே எனது இலக்கு என்ற நோக்கில் தேர்தல் பணிகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் நடிகர் விஷால், தனது விஷால் ரசிகர் மன்றத்தை, விஷால் மக்கள் மன்றமாக மாற்றி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது  விஜயை போன்று விஷாலும் அரசியலுக்கு வருவாரா.. இல்லையா.. என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது.


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் இப்போது அரசியலுக்கு வரவில்லை. ஆனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் இருந்தால்  கண்டிப்பாக வருவேன் என்று கூறி இருந்தார். இதன் மூலம் சினிமா வட்டாரத்தில் அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்தது.


இந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள திருமண மண்டபத்தில்  நடிகர்  சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இது பற்றிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனும் ரசிகர் நற்பணி மன்றத்தை மாற்றி புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்க போகிறாரா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. 


திடீரென இந்த நற்பணி மன்ற நிர்வாகிகளின் கூட்டம் எதற்கு.. அதுவும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை ஏன் சந்திக்க வேண்டும் .. என்ன பேசினார்கள்..என்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.  




உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க இருப்பதால், கமிட்டான இரண்டு படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடுவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். நடிகர் அஜித்தும் ஆரம்பித்துள்ள புது தொழிலில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.  விஜய் சேதுபதியும் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி ஃபீல்டிலும் நடித்து வருகிறார். 


இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜய், அஜித்தின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பதற்காக இப்படி ஒரு ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டமா.. அல்லது நடிகர் சிவகார்த்திகேயனும் அரசியலில் ஜொலிக்க திட்டமிடுகிறாரா ..என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் நிலவி வருகிறது.


விஜய் பாணியில் விஷால் வரத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைவாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.