என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அரசியல் கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கோபமாக பதிலளித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தை த.செ ஞானவேல் ராஜா இயக்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ஹண்டர் வாரார் என்ற இரண்டாவது பாடல் வெளியானது. இப்பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு அரங்கில் இன்று மாலை 6:00 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் முக்கிய நட்சத்திரங்கள் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
இதற்கிடையே, தனது அடுத்த படமான கூலி படத்தின் ஷூட்டிங்கில் இருந்து தற்போது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
வேட்டையின் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு, எனக்கு தெரியவில்லை என பதிலளித்தார். அதே சமயம் வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவதாக செய்திகள் வெளியாகி வருவதற்கு உங்களின் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் மிகவும் கோபமாக அரசியல் கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் என்று சொல்லியிருக்கேனா இல்லையா என்று கோபமாக பதிலளித்து விட்டு நகர்ந்து சென்றார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் திமுக விழா ஒன்றில் அவர் பேசும்போது மூத்த அமைச்சர் துரைமுருகன் குறித்து கேலியாக பேசப் போக அது பெரும் பரபரப்பாக மாறியது. துரைமுருகன், அதற்கு பதிலடி கொடுக்க மேலும் சூடு கூடியது. இதை மனதில் வைத்துத்தான் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான கேள்வியை ரஜினிகாந்த் தவிர்த்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்