ரியல் ஹீரோவாக மாறிய பிரபாஸ்... வெள்ளத்தில் மிதக்கும்.. ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 5 கோடி நிதியுதவி

Meenakshi
Sep 04, 2024,04:00 PM IST

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக ரூ.5 கோடி நிதி வழங்கி நிஜ ஹீரோவாக மாறியுள்ளார் பாகுபலி ஹீரோ பிரபாஸ்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். ஆந்திராவில் 21 பேரும்,தெலங்கானாவில் 19 பேரும்  என 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வெள்ளத்தினால் பலர் காணாமல் போயுள்ளனர்.



என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, எலுரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் அந்த அந்த மாநிலங்களின் அரசு மற்றும் தன்னார்வலர்கள்  செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு திரைப்பிரபலங்கள் மற்றும்தொழிலதிபர்கள்  வெள்ள நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் தலா 25 லட்சமும்,  மகேஷ்பாபு தலா 25 லட்சமும், ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.1 கோடியும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் ரூ.5 கோடியை அள்ளி வழங்கி  நிவராண நிதியாக வழங்கியுள்ளார். பிரபாசின் இந்த செயலுக்கு இணையதள பக்கங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தெலுங்கு நடிகர்களிலேயே மிகப் பெரிய நிதியுதவியைச் செய்துள்ளவர் இவர்தான். நடிகரும், அமைச்சருமான பவன் கல்யாண் கூட ரூ. 1 கோடியைத்தான் கொடுத்துள்ளார். ஆனால் பிரபாஸ் எல்லோரையும் மிஞ்சி விட்டார். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்