"கேப்டன்.. செய்த மனிதநேயத்தை.. நாம் தொடர வேண்டும்.. அதுதான் அஞ்சலி".. பார்த்திபன் வேண்டுகோள்!

Manjula Devi
Dec 29, 2023,12:22 PM IST

சென்னை: கேப்டன் விஜயகாந்த் காட்டிய மனிதநேயத்தை.. செய்த நல்ல காரியங்களை நாம் தொடர வேண்டும்.. அதுதான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி.. என நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விஜயகாந்த்துக்கு மலர் மரியாதை செலுத்திய பின்னர் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: 




மரணம் எல்லோருக்கும் வரும். ஆனால் அது இப்படித்தான் வரணும். ஒரு மரணத்தின் போது தான் ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதற்கான அடையாளமாக இருக்கும். ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்கள் மாறுபடுவார்கள். சில பேர் அவருடைய நடிப்பை ரசித்திருப்பார்கள். சில பேர் அந்த நடிகருடைய அறிவை ரசித்து இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் ரசிகர்கள் எல்லோரும் அவருடைய மனிதநேயத்தை அறிந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள். அந்த வகையில் அவருடைய தீவிர ரசிகன் நான்.


இப்போது இருந்தே தயாராகுங்கள். விஜயகாந்த் சாரை அடக்கம் செய்வது உங்கள் எல்லோருடைய மனதில் தான். அதனால் தான் உடலளவில் பிரிந்த அவர் நமது மனதளவில் வரப்போகிறார். நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இன்று ஒரு நாள் மட்டும் அவருக்கு அஞ்சலி செய்யாமல், அவர் செய்த நல்ல காரியங்களை எப்பவுமே செய்ய வேண்டும்.


என் வாழ்க்கையை அவர் தான் ஆரம்பித்து வைத்தார். அதை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். இப்படி எல்லோருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார். நான் கொஞ்ச நாள் முன்னாடி அவருடைய துணைவியாரிடம் சொன்னேன். நீங்க அவருடைய மனைவி மட்டும் என இல்லாமல் அவருடைய தாயாக மாறி அவரை பாதுகாத்ததால் தான் இந்த சோகம் இவ்வளவு தாமதமாக வந்துள்ளது. இல்லையென்றால் இந்த சோகம் முன்னாடியே நமக்கு வந்திருக்கும் என்றேன். அவர் செய்த மனிதநேயத்தை நாம் தொடர வேண்டும் .அதுதான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி என கூறியுள்ளார் பார்த்திபன்.


இயக்குனர் வெற்றிமாறன்


அவர் சினிமாவில் மட்டும் கதாநாயகன் இல்லை. நிஜ வாழ்க்கையிலும் ஒரு கதாநாயகனாகவே வாழ்ந்து நிறைய பேருக்கு ஒரு தலைவராகவும் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். இன்னைக்கு சினிமாவில் எல்லோருடைய வாழ்க்கையிலும் நல்லது செய்து இருக்கிறார். 


விஜயகாந்த்துடைய இறப்பு, அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இந்த நேரத்தில் அவருடைய விருப்பம் என்னவோ, ஆசை என்னவோ, அதை எல்லோரும் சேர்ந்து நின்று நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.