அப்பாவைப் பெருமைப்படுத்திய ஸ்டாலின்.. நடிகர் மோகன்ராம் நெகிழ்ச்சி

Su.tha Arivalagan
Mar 29, 2023,12:18 PM IST

சென்னை: எனது தந்தை வி.பி.ராமன் பெயரை அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு சூட்ட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. முதல்வருக்கு நன்றி என்று நடிகர் மோகன்ராமன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக திகழ்ந்தவர் வி.பி.ராமன் எனப்படும் வெங்கட பட்டாபி ராமன். திமுகவில் இணைந்து செயல்பட்டவரும் கூட. மிகச் சிறந்த சட்ட நிபுணராக அறியப்படும் இவரது மகன்தான் நடிகர் மோகன்ராமன். மோகன்ராமின் மகள் வித்யுலேகாவும் நடிகைதான்.



இந்த நிலையில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில்தான் வி.பி.ராமன் வசித்த வீடு உள்ளது. இந்த வீடு உள்ள சாலைக்கு தங்களது தந்தையின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று ராமன் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் கோரிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்று வி.பி.ராமன் பெயரைச் சூட்ட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் மோகன்ராமன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு எங்களது தந்தை வி.பி.ராமன் பெயர் சூட்ட உத்தரவிட்டிருப்பது மிகவும் கெளரவமானதாக உணர்கிறோம்.. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகள். மிகப் பெரிய கெளரவம். சென்னை மேயர், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எங்களது நன்றிகள் என்று மோகன்ராமன் கூறியுள்ளார்.